சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய பிரின்ஸ்-ரசிகர்கள் மேல தாளத்துடன் கொண்டாட்டம்!

நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் பிரின்ஸ் திரைப்படத்தில் உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் சென்னை ரோகிணி திரையரங்கில் அதிகாலை 5 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.

முன்னதாக பிரின்ஸ் படத்தின் வெளியீட்டை கொண்டாடும் வகையில் அதிகாலை முதல் காட்சியை காண வந்திருந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் திரையரங்கு வளாகத்தில் பிரம்மாண்ட பேனர்கள் வைத்தும், கட்அவுட் வைத்தும், பேண்ட் வாத்தியங்கள் இசைத்தும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். மேலும் சிலம்பம், நெருப்பு சாகசங்கள் உள்ளிட்டவை நிகழ்த்தியும் மகிழ்ந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்த படத்தைக் காண வந்திருப்பதாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தெரிவித்தனர்.

சென்னை ரோகிணி திரையரங்கில் அதிகாலை முதல் காட்சியை காண நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் வந்திருந்தார். அவரை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் தனது ரசிகர்களுடன் பிரின்ஸ் திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் கண்டு மகிழ்ந்தார். திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த சிவகார்த்திகேயன் படம் சிறப்பாக இருப்பதாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.