இலங்கையில் இடம்பெற்ற இனப் பிரச்சினைக்கான தீர்வை சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் மறுத்து வருகிறார்கள் என தமிழரசுக் கட்சியின் (ITAK) திருகோணமலை மாவட்ட வேட்பாளரும், அரசியல் ஆய்வாளருமான ஆ.யதீந்திரா தெரிவித்துள்ளார்.
மூதூர் (Mutur) பகுதியில் இன்று (02) காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவம் கருதி திருகோணமலையில் நாம் ஓரணியாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
தேசிய மக்கள் சக்தி (NPP) தற்போது புதிய நெருக்கடியாக உருப்பெற்றுள்ளது. இக்கட்சி ஊழலற்ற ஆட்சியை கட்டியெழுப்ப முனைகிறது என தமிழ் மக்கள் மத்தியில் ஆங்காங்கே சிலர் பேசுகிறார்கள்.
தமிழ் கட்சிகள் என்ன செய்தது என்கிற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தேசிய மக்கள் சக்தி ஒரு அரசியல் ஊழலை பேணிப்பாதுகாக்கிற கட்சியாக உள்ளது.
75 வருடங்களாக தமிழ் தேசிய இனம் ஒரு அரசியல் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளது. இனப் பிரச்சினைக்கான தீர்வை சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் மறுத்து வருகிறார்கள். இதை அரசியல் ஊழலாக பார்க்க வேண்டியுள்ளது.
தமிழ் கட்சிகள் தொடர்பில் அதிருப்தி இருக்கிறது. இதற்கு தமிழ் கட்சிகளை வழிநடாத்தியவர்களும் ஒரு காரணம். தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கட வேண்டும்.
கடந்த காலங்களில் தவறுகள் நடந்திருக்கலாம். வாக்களிக்கின்ற போது ஊர், சொந்தம், பந்தம் என்று பாராமல் தமிழ் மக்களை வழிநடாத்தக் கூடியவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தல் இரா.சம்பந்தன் (R. Sampanthan) இல்லாமல் நடக்கின்ற தேர்தலாகும்“ என அவர் மேலும் தெரிவித்தார்.