திட்டமிட்டு பறிபோகும் தமிழர் நிலங்கள்

இலங்கையில் தமிழர் நிலப்பகுதி சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிக்கப்படுவது தற்போதுதான் புதிய நடைமுறையல்ல. மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் அதனை ஒரு நிகழ்ச்சி நிரலாகவே தம்வசம் வைத்துள்ளன.

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களாலும் இராணுவ ஆக்கிரமிப்புக்களாலும் தமிழர் நிலம் பறிபோவதுடன் இன்று யுத்தம் முடிந்து 14 வருடங்களுக்கு மேலாகியும் தமிழர்கள் அகதி முகாம் வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

கல்லோயாவில் தொடங்கி கந்தளாய், அல்லை குடியேற்றத்திட்டத்துடன் ஆரம்பமான இந்த ஆக்கிரமிப்பு இன்று குருந்தூர் மலையில் வந்து நிற்கிறது.

ஆக்கிரமிக்கப்படும் தமிழர் நிலங்களின் பெயர்களும் அடியோடு மாற்றப்படுகிறது. திருகோணமலையில் பதவியா -பதவியாபுர எனவும் திரியாய் -திரிய எனவும் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இதய பூமியான மணலாறு வெலி ஓயா எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அவர்களின் வடக்கு கிழக்கு நகர்விற்கு தடையாக மணலாறில் இருந்த மண்கிண்டிமலை இராணுவ முகாமை அழித்தனர் என்பது வரலாறு.

இந்த நிலை தற்போது குருந்தூர் மலைக்கும் வந்துள்ளது.அழகான பெயர் குருந்தூர்மலை. அங்கு சிங்களவர்கள் கட்டும் விகாரையின் பெயர் குருந்தி விகாரை.இது நாளடைவில் குருந்தூர் மலையை இல்லாமல் செய்து குருந்தி என அழைக்கப்படபோகிறது.

ஒன்று எல்லைப்புறங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்.இரண்டு திட்டமிட்ட பெளத்த விகாரைகள் அமைத்து அதனூடாக சிங்கள குடியேற்றம். மூன்று இராணுவ ஆக்கிரமிப்பு ஊடாக நில அபகரிப்பு.

சரி இவ்வாறு தமிழர் நிலம் பறிபோவது தொடர்பாக தமிழர்களின் தலைவர்கள் என்று தம்மைத்தாமே கூறிக்கொள்ளும் தலைவர்கள் எடுத்த நடவடிக்கைதான் என்ன?

தமிழர் நலனில் அக்கறை கொள்ளும் தமிழ் தலைவர்கள் இருக்கின்றார்களா?

நாடாளுமன்றில் வெறும்வாய்ச்சவாடல் மட்டும் இதற்கு தீர்வாகாது.அல்லது நீதிமன்றங்களில் வழக்கு போட்டு அதனை தற்காலிமாக நிறுத்தலாமே தவிர நிரந்தர தீர்வு ஒருபோதும் கிடைக்கமாட்டாது.

அப்படியென்றால் கட்டமைக்கப்பட்ட வழிகளின் மூலமாகவே இதனை செய்யவேண்டும்.இதற்கு தமிழ் தலைவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள்.ஆளுக்கொரு கட்சி.சிறிய இனம் நாங்கள். ஆனால் சிங்கள கட்சிகளை விடவும் தற்போது தமிழர் தரப்பில் அரசியல் கட்சிகளின் தொகை கூடி விட்டது. இதற்கு அரசியலில் நுழைந்தால் சம்பாதிக்கலாம் என்ற கனவும் காரணமாக இருக்கலாம்.

அது சரி தமிழர் நலனில் அக்கறை கொள்ளும் தமிழ் தலைவர்கள் தற்போது யார்தான் இருக்கின்றார்கள்.தொடர்ந்து பறிபோகத்தான் போகிறது தமிழர்நிலமும் தமிழரின் வாழ்வும்