“முள்ளிவாய்க்காலில் சிங்களம் அடைந்த வெற்றி இராணுவ வெற்றி அல்ல இன அழிப்பின் வெற்றி” என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரதம அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று (18.05.2023) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
''இற்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்னர், 2009 ஆம் ஆண்டு மே மாதம் சிங்கள இனவாதப்பூதம் தமிழீழ தேசம் மீது நடத்திய இனஅழிப்பு வெறியாட்டத்தின் நினைவு நாள்.
நாகரிக உலகம் வெட்கித் தலைகுனியும் வகையில் முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்தேறிய பெரும் தமிழினவழிப்பின் நினைவுகளை, அறச்சீற்றத்துடன் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஒன்றாய்க்கூடி நினைவுகூரும் நாள்.
நமது மக்கள் கொத்துக் கொத்தாய் சிங்களத்தின் இனவழிப்பில் கொல்லப்பட்டமை நமது தேசத்தில் ஏற்படுத்திய பெருந்துயரை நாம் தமிழீழத் தேசிய துக்கநாளாய் அனுஷ்டிக்கும் நாள்.
இலங்கை அரசு தமிழினவழிப்பின் ஊடாக நம் தேசத்தில் ஏற்படுத்திய பெருந்துயர் ஓர் ஆறாத வடுவாக தமிழ் மக்கள் நெஞ்சங்களில் நிலைத்திருக்கிறது. முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்களம் அடைந்தது யுத்தத்தை வெற்றி கொண்ட ஓர் இராணுவ வெற்றி அல்ல.உணவுத்தடை, மருந்துத்தடை, இடைவிடாத குண்டு வீச்சுகள் காரணமாக மக்களை பராமரிக்கும் சுமை தமிழீழ விடுதலைப் புலிகளின் தோள்கள் மீது சுமத்தப்பட்டது. கஞ்சிக் கொட்டில்கள் அமைத்தும், 24 மணி நேர மருந்துக் கொட்டகைகள் அமைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் “ யுத்தகளத்தில் போராடுவதற்கு இருக்கும் வீரத்தை விடவும், யுத்தத்தால் ஏற்படும் சுமையை தாங்குவதற்கான வீரம் பெரிதாக இருக்க வேண்டும்.
” என்ற சன் டுஸ் (Sun Tzu) இன் வாசகங்களிற்கு இலக்கணமாக செயற்பட்டார்கள். இச் சுமை தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ வலுவில் எதிர்த்தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதன் காரணமாகவே சிங்களம் வெற்றி கொண்டது. இது ஓர் இனவழிப்பு. எந்தவித அறமுமின்றி இனவழிப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆக்கிரமிப்பு.
முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு எழுப்பிய வெற்றி முழக்கும் ஓர் இன அழிப்பு வெற்றி முழக்கம். ஆக்கிரமிப்பு வெற்றி முழக்கம். இது குறித்து உணமையில் சிங்கள மக்கள் வெட்கித் தலைகுனிந்திருக்க வேண்டும்.
இத் தமிழினவழிப்புக் குற்றவாளிகள் அனைத்துலகச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இலங்கை அரசுதான் இனவழிப்பின் முதற் குற்றவாளி என்பதுவும் நிலைநிறத்தப்பட வேண்டியது.
தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்காக மட்டுமல்ல, உலகின் ஏனைய நாடுகளில் இனவழிப்பில் ஈடுபடக்கூடிய கொடிய ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை வழங்குவதற்காகவும் தமிழினவழிப்புக் குற்றவாளிகள் அனைத்துலக நீதிப்பொறிமுறையின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டனை வழங்கப்பட வேண்டியவர்கள்.
தமிழினவழிப்புக் குற்றவாளிகள் தண்டிக்கபடும் நிலையை ஏற்படுத்தவதற்காக நாம் தொடர்ச்சியாகப் போராட வேண்டியுள்ளது. நீதி,அனைத்துலக உறவுகளாலும், நலன்களாலும அலைக்கழிக்கப்படும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த அவலநிலைக்கு அனைத்துலக சமூகம் பொறுப்பெடுக்க வேண்டும். இக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது மட்டும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாம் வழங்கப் போதில்லை.
தமிழ் மக்களுக்கென சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு அமைதல் ஒன்றே சிங்களத்தின் தமிழினவழிப்புத்திட்டத்தை ஈடு செய்யக்கூடிய அரசியல் ஏற்பாடாக அமைய முடியும் என்பதனை இந் நாளில் அனைத்துலக சமூகத்திற்கு நாம் வலியுறுத்திச்சொல்வோம்.
முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பில் மூச்சிழந்துபோன நம் மக்களை நினைவில் இருத்தி, தலைசாய்த்து நமது வணக்கத்தைச் செலுத்திக் கொள்வோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட முழுமையான விபரம் கீழ் இணைக்கப்பட்டுள்ளது
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            