கொழும்பை நேற்றிரவு உலுக்கிய துப்பாக்கி சூடு : ஒருவர் பலி, 3 பேர் கவலைக்கிடம்

கொழும்பில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் நேற்று இரவு துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது. இதில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 8.40 மணியளவில் ஸ்கூட்டரில் வந்த அடையாளம் தெரியாத இருவர், ஐந்து இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர்.

56 கலிபர் துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொழும்பு 9 ஐச் சேர்ந்த 21, 22 மற்றும் 23 வயதுடைய 4 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதில் மூவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்தார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மூவருக்கும் எதிர்காலத்தில் மேலதிக அறுவை சிகிச்சைகள் தேவைப்படலாம் என்றும், அவர்களின் உடல்நிலை குறித்து தற்போது உறுதியாக கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.