யாழை சேர்ந்த ஜே.கே. பாய் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள்! சர்வதேச ரீதியாக வலைப்பின்னல்

இலங்கையை விட்டு தப்பிச் செல்லும் பாதாள உலக குற்றவாளிகளுக்கு மொரீஷியஸ் கடவுச்சீட்டுகளை தயாரிக்கும் மோசடி தெரியவந்துள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜே.கே. பாய் என்ற சர்வதேச ஆட்கடத்தல்காரரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஜே.கே. பாய் வெளிப்படுத்திய தகவல்களிற்கமைய, மொரீஷியஸ் கடவுச்சீட்டு துருக்கியில் உள்ள ஒரு கடத்தல்காரரால் தயாரிக்கப்படுகின்றன.

இலங்கையில் ஏற்பட்ட பெரும் சோகம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்

துருக்கி கடத்தல்காரரின் பணி டுபாயில் வசிக்கும் ஒரு அரபு நாட்டவருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோசடியான கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு அவர் ஒரு மில்லியன் மற்றும் அதற்கு மேல் வசூலிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

20 அல்லது அதற்கு மேற்பட்ட போலி கடவுச்சீட்டுகளை ஜே.கே. பாய் தயாரித்துள்ளார். மோசடியாக தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டுகளில் பல புகைப்படங்கள் அவரது கையடக்க தொலைபேசியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் குற்றவாளிகளுக்கு மேலதிகமாக, இந்திய குற்றவாளிகளுக்கும் மொரீஷியஸ் கடவுச்சீட்டுகள் தயாரிக்க ஏற்பாடு செய்துள்ளது.

ஜே.கே. பாய் பெரும்பாலான உள்ளூர் குற்றவாளிகளை படகு மூலம் இந்தியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கெஹல்பத்தர பத்மே, இஷாரா செவ்வந்தி, பெக்கோ சமன், அவரது மனைவி, பத்து வயது சிறுமி உள்ளிட்ட பாதாள உலகத்துடன் தொடர்புடைய பலருக்கு மொரீஷியஸ் கடவுச்சீட்டுகளை தயாரிப்பதில் ஜே.கே. பாய் முக்கிய மூளையாக செயற்பட்டுள்ளார்.

ஜே.கே. பாய் என்ற இந்த ஆட்கடத்தல்காரருக்கு தாய்லாந்து, இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, நேபாளம், துபாய், மொரீஷியஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த மனித கடத்தல்காரர்களுடன் தொடர்பு உள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக இன்டர்போல் மற்றும் இராஜதந்திர வழிகள் மூலம் தொடர்புடைய நாடுகளுக்குத் தெரிவிக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகின்றனர்.

இது தவிர, பாதாள உலகக் குற்றவாளிகள் உட்பட பல்வேறு நபர்கள் நாட்டில் சட்டவிரோதமாக வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை தயாரிக்கும் ஒரு மோசடி குறித்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்த மோசடியில் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் எதிர்காலத்தில் கைது செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. ஜே.கே. பாய் என அழைக்கப்படும் கெனடி செபஸ்தியன் பிள்ளை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.