காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கமைய முதல் கட்டமாக விடுவிக்கப்படவிருந்த 33 இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பணயக் கைதிகள் தொடர்பான ஹமாஸின் பட்டியலை மேற்கோள் காட்டி இஸ்ரேல் அரசாங்க ஊடக பேச்சாளர் டேவிட் மென்சர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஏனைய 25 பேர் உயிருடன் இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸிடமிருந்து பணயக் கைதிகளின் தகவல்களைப் பெற்ற இஸ்ரேல், அவர்களின் நிலைமை குறித்து குடும்பங்களுக்கு அறிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், முதல் கட்டமாக விடுவிக்கப்படவிருந்த பணயக் கைதிகளில் ஒரு தொகுதியினர் நாளை மறுதினமும், மற்றுமொரு தொகுதியினர் எதிர்வரும் சனிக்கிழமையும் விடுவிக்கப்படவுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதேநேரம் இஸ்ரேலிய பணையக்கைதிகளில் முக்கியமானவரான அர்பெல் யா{ஹட் என்பவரை ஹமாஸ் விடுதலை செய்யாமல் இருந்து வந்ததால் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக குற்றம் சாட்டிய இஸ்ரேல், வடக்கு காசாவிற்குள் பாலஸ்தீன் மக்கள் செல்ல தடை விதித்தது. அதை தொடர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் அர்பெல் யாஹ_ட் பத்திரமாக இருப்பதாகவும், அவரை சனிக்கிழமை அன்று விடுவிப்பதாகவும் ஹமாஸ் கூறியுள்ளது.
இதனால் காசாவிற்குள் பாலஸ்தீன மக்கள் நுழைய இஸ்ரேல் அனுமதித்துள்ளது. இதனால் போர் காரணமாக காசாவை விட்டு சென்ற ஏராளமான மக்கள் மீண்டும் காசா நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர்.