பேரதிர்ச்சி..! பெற்ற தாயைக் காணாமலே விடை பெற்றார் சாந்தன் !

“எனது ஆசை எல்லாம் எனது பிள்ளை நல்லபடியாக என்னிடம் வந்து சேரவேண்டும் என்பதுதான். அவருடன் நான் சிறிதுகாலம் வாழ வேண்டும். அதற்காகவே தான் நான் உயிருடன் இருக்கிறேன் என.. தனது மகனின் வரவுக்காக காத்திருந்த தாயிற்கு இறுதியில் மகனின் மரணச் செய்தியே செவிகளில் வந்து விழுகின்றது.

இந்த செய்தியை கேட்ட அந்த தாயின் உள்ளம் எவ்வளவு பரிதவித்து போயிருக்கும் என்பதை ஒவ்வொரு சாதாரண மனிதனாலும் உணர முடியும்.

ஆம்... இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல் நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார்.

அவரை காண மிகவும் ஆவலாக இருந்த சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி இன்று நடை பிணமாக மகனின் பிரிவை நினைத்து வேதனையில் உரைந்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

32 ஆண்டுகளுக்கு மேலாக 7 பேரும் சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில், அவர்களை விடுவிக்க தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

 இதனை ஆளுநர் ஏற்கவில்லை. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் விடுதலை செய்தது.

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்கு சென்று இயல்பு வாழ்க்கையை தொடர்ந்தனர்.

மறுபக்கம் இலங்கையை பூர்வீகமாக கொண்ட சாந்தன், ரோபர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன் உள்ளிட்டோர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு தங்கள் வீடுகளுக்கு செல்லவில்லை.

 அவர்கள் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்கள் என்ற காரணத்தால் நாடு திரும்ப முடியாத நிலை காணப்பட்டது.

 அவர்களை தாய் நாட்டுக்கு அனுப்புவதில் சட்ட சிக்கல் நிலவிய நிலையில், திருச்சியில் உள்ள இலங்கை தமிழருக்கான சிறப்பு முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

திருச்சி சிறப்பு முகாம் சிறையைவிட மோசமாக இருப்பதாகவும், வெளியில் சென்று காற்று வாங்குவதற்கு கூட சுதந்திரம் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்து வந்தனர்.

 தங்களை இலங்கை செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

 திருச்சியில் உள்ள சிறப்பு முகாம் சிறையை விட கொடுமையானதாக உள்ளது என்றும், நடை பயிற்சி செய்வதற்கோ நண்பர்களை பார்ப்பதற்கோ முடியவில்லை என வேதனை தெரிவித்து இருந்தனர்.

சிறைவாசிகளோடு பழகுவதற்கு கூட அனுமதி இல்லை என்றும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து பல மாதங்கள் அறையிலேயே தங்க வைக்கப்பட்டதால் பல நோய்களுக்கு உள்ளாவதாக தெரிவித்தனர்.

மறுபக்கம் சாந்தனுக்கு முகாமில் உடல் நிலை மோசமானது. இதற்கிடையே அண்மையில் மத்திய அரசு சாந்தன் இலங்கை செல்வதற்கு அனுமதி வழங்கியது. இதேநேரம் சாந்தன் இலங்கை வருவதில் எந்த ஆட்சேபணையும் இல்லை இலங்கை அரசும் கூறியிருந்தது.

இந்த நிலையில் சாந்தனுக்கு உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் இன்று காலை 7.50 மணியளவில் காலமானார் என்று ராஜீவ் காந்தி மருத்துவமனை தெரிவித்து உள்ளது.

 அவரது உடலை யாழ்பானத்துக்கு எடுத்து செல்ல உள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார்.

 சிறையிலிருந்து விடுதலையாகி ஒன்றரை ஆண்டுகளில் சாந்தன் தாய் நாடான இலங்கைக்கு செல்ல முடியாமல் காலமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதேவேளை  , கடந்த 32 ஆண்டுகளாக நான் என் பிள்ளையைப் பார்க்காமல் உள்ளேன். எனது கடைசிக் காலத்தை பிள்ளையுடன் கழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் எனது உயிரைப் பிடித்து வைத்திருக்கின்றேன். எனது வலது கண் பார்வை முழுவதும் போய் விட்டது என சாந்தனின் தாயார் கூயிருந்தார்.

மேலும்  , மகனின் வரவுக்காய் காத்திருந்த சாந்தனின் தாயார்,   ஜனாதிபதி  ரணில் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும்   மகனை நாட்டுக்கு வரவழைக்க  மனு கொடுத்திருந்த நிலையில்,  தமிழகத்தில் சாந்தன் உயிரிழந்துள்ளமை  பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.