200 தொன் உணவுடன் காசாவை நெருங்கிய கப்பல் : இஸ்ரேல் தொடர் தாக்குதல்


சைப்ரஸில் இருந்து 200 தொன் உணவு உதவிகளை ஏற்றிய கப்பல் நேற்று (14) காசா பகுதியை நெருங்கியது. இது இஸ்ரேலின் முற்றுகையில் உள்ள காசாவுக்கு மேலும் மனிதாபிமான உதவிகள் செல்வதற்கான புதிய வழிகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள தமது களஞ்சியங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் புதன்கிழமை நடத்திய தாக்குதல்களில் ஒரு ஊழியர் கொல்லப்பட்டதாக காசாவில் இயங்கும் ஐ.நா உதவி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தினால் நடத்தப்படும் ரபா உதவி நிலையத்தின் மீதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையமானது காசா பகுதியில் உணவு விநியோகிக்கும் ஐ.நாவின் கடைசி மையங்களில் ஒன்றாகும். ஐ.நா நிறுவனத்தின் மீதான இஸ்ரேல் இராணுவத்தின் தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து சுயாதீன விசாரணை ஒன்றை அந்த அமைப்பு கோரியுள்ளது.

அதேபோன்று உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் இராணுவம் மீண்டும் ஒருமுறை நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டு மேலும் 85 பேர் காயமடைந்துள்ளனர். காசா நகரில் கடந்த செவ்வாய் மாலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக பார்த்தவர்களை மேற்கோள் காட்டி பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா செய்தி வெளியிட்டுள்ளது.


காசா நகரின் தெற்கில் உள்ள குவைட் சுற்றுவட்டப்பாதையில் ஒன்று திரண்டு உதவிக்காக காத்திருந்தவர்கள் மீதே இஸ்ரேல் இராணுவம் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் போர் காரணமாக காசாவில் பஞ்சம் ஒன்று ஏற்படும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள சூழலில் அங்குள் 2.4 மில்லியன் மக்களுக்கு உணவு உதவிகளை விரைவாக வழங்குவதற்கு நன்கொடை நாடுகள், உதவி நிறுவனங்கள் மற்றும் தொண்டு அமைப்புகள் முயன்று வருகின்றன.

போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான மத்தயஸ்தர்களின் முயற்சிகள் இதுவரை தோல்வியை சந்தித்துள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பை அழிக்கும் நடவடிக்கைக்கு தமது படை அனைத்து இடங்களுக்கும் செல்லும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஸ்பெயின் ‘ஓபன் ஆர்ம்’ தொண்டு நிறுவனத்தின் உதவிக் கப்பல் இஸ்ரேலிய கடற்கரைக்கு அப்பால் தெற்காக மெதுவாக பயணித்து வருவதாக கடல் போக்குவரத்து தொடர்பான இணையதளத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

காசாவுக்கு கடல் வழியாக உதவிகளை வழங்கும் முதல் முயற்சியாகவே இந்தக் கப்பல் பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் வானில் இருந்து உதவிகளை போடுவது மற்றும் கடல் வழியாக உதவிகளை வழங்கும் முயற்சிகள் தரை வழி உதவி விநியோகத்திற்கு ஈடாகாது என்று சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் ஒக்ஸ்பாம் உட்பட 25 அமைப்புகள் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் ‘ஒபன் ஆர்ம்’ கப்பலின் வருகைக்காக காசா நகர மக்கள் காத்துள்ளனர்.