கொழும்பை வந்தடைந்தது சாந்தனின் உடல் : சோகத்தில் ஈழம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட  ஈழத்தமிழர் சாந்தன்,  சென்னையில் உயிரிழந்த நிலையில் அவரின் உடல் இன்று முற்பகல் 11.50 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இதனை தொடர்ந்து சாந்தனின் பூதவுடல்  கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாந்தனின் உடலை கையளிப்பதற்காக சட்டத்தரணி புகழேந்தியும் சென்னையில் இருந்து அதே விமானத்தில் இலங்கைக்கு வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன், பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்ப இருந்த நிலையில் உடல் நலக்குறைவால் நேற்றுமுன்தினம் காலை உயிரிழந்தார்.

இந்நிலையில் சாந்தனின் மறைவுச் செய்தியை அறிந்து,  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி மற்றும் பேரறிவாளன் உள்ளிட்டோரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் சென்னை ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனைக்கு சென்று சாந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

3 தசாப்த காலமாக தாய்நாட்டுக்கு வந்து தாயை சந்திக்கவேண்டும் அவரின் கையால் உணவு உண்ண வேண்டும் என்ற ஒரேஒரு ஆசையில் காத்திருந்த மகன், சடலமாக திரும்புவது தமிழ் மக்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது.