கனடாவில் லொறி ஒட்டுநர்கள் நடத்தும் போராட்டத்தினால் கடுமையான பொருளாதார பாதிப்பு!

கனடாவில் கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக லொறி ஒட்டுநர்கள் நடத்தும் போராட்டத்தினால், கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ஒமர் அல்காப்ரா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘அமெரிக்காவின் டெட்ரயாட் மற்றும் கனடாவின் வின்ட்சர் நகரை இணைக்கும் தூதர் பாலம், உலகின் மிக முக்கியமான எல்லை கடக்கும் பாலங்களில் ஒன்று.கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மொத்த வர்த்தகத்தில் 25 சதவீதம் இந்த பாலம் வழியாக நடக்கிறது.தற்போது இந்த பாலத்தை போராட்டக்காரர்கள் ஒரு வாரத்துக்கு மேலாக முற்றுகையிட்டு இருப்பதால் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் பாதிப்பட்டுள்ளது.இத்தகைய தடைகள் பொருளாதாரம் மற்றும் வினியோகச் சங்கிலிகளில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்’ என கூறினார்.ஏற்கனவே இந்த போராட்டத்தினால் நாட்டில் பொருளாதார சீர்குலைவு ஏற்படும் அபாயம் உருவாகும் என மத்திய அரசாங்கம் கவலைக் கொண்டிருந்த நிலையில் இந்த செய்தி வந்துள்ளது.கனடாவில் பொது இடங்களில் நடமாடுவோர் பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது.மேலும் லொறி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும் தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அரசாங்கம் உத்தரவிட்டது.இதனைத்தொடர்ந்து கனடாவில் எல்லை தாண்டி செல்லும் லொறி ஓட்டுநர்கள் கடந்த மாதம் 29ம் திகதி தலைநகர் ஒட்டாவாவில் ‘சுதந்திர அணிவகுப்பு’ என்கிற பெயரில் போராட்டத்தை தொடங்கினர்.இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதனிடையே போராட்டத்தைக் கட்டுப்படுத்த சில தினங்களுக்கு அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டது. அத்துடன் இந்த போராட்டம் நிறுத்தப்பட வேண்டுமென பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார். அத்துடன் தலைநகர் ஒட்டாவாவில் கூடுதல் பொலிஸாரை அனுப்ப பிரதமர் அனுமதி வழங்கியுள்ளார்.