20 வயது பெண்ணை 6 முறை சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படையினர்! வலுக்கும் ஹிஜாப் போராட்டம்


ஈரானின் கடுமையான ஹிஜாப் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு நாட்டின் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட 22 வயதான மஹ்சா அமினியின் மரணம் எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளது.

இதன் போது இடம்பெற்ற போராட்டங்களின் போது 100 பேர் கொல்லப்பட்டதாகவும், கிட்டத்தட்ட 2,000 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானில் நாடு முழுவதும் பெண்களின் உரிமைகளுக்கு எதிராக ஆவேசமான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஈரான் பாதுகாப்புப் படையினரால் 20 வயது பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஹதீஸ் நஜாஃபி (Hadis Najafi, 20) தனது நாட்டின் கடுமையான ஹிஜாப் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க தெருக்களில் இறங்கியுள்ளார்.

கராஜியில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளத் தயாரான போது, ​​அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது,

இதில் ​​ஆறு முறை தோட்டாக்களால் துளைக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகளால் கண்மூடித்தனமாக சுட்ட தோட்டாக்களால் மார்பு, முகம், கை மற்றும் கழுத்தில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

துப்பாக்கிசூட்டுக்கு பின் ஹதீஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள், பெண்களுக்கான கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரத் தடைகளால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்களில் மஹ்சாவின் மரணம் ஈரான் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் தங்கள் ஹிஜாப்களை அசைத்தும் தீயிலிட்டு எரித்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.