தலைவரின் உறவினர் சொன்ன ரகசிய செய்தி - உண்மையை உடைக்கும் முன்னாள் எம்.பி


“ஒரு சிலர் கூறுவது போல விடுதலைப் புலிகளின் தலைவரது குடும்பம் அழியவில்லை” என தலைவரின் மனைவி மதிவதனியின் அக்கா தன்னிடம் கூறியதாக தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்

தலைவரின் மரணம் தொடர்பில் பல அறிவிப்புகள் வந்தாலும், இதுவரை  அரசாங்கம் அவரது மரணம் குறித்து டி.என்.ஏ பரிசோதனை அறிக்கையை வெளிப்படுத்தவில்லை. அதே போல மரணச் சான்றிதழையும் கையளிக்கவில்லை.

45 ஆண்டு காலமாக பழ. நெடுமாறன் விடுதலைப்புலிகளுடன் கொண்டிருந்த நெருக்கமான தொடர்புகளால், அவரை நாங்கள் நம்புகிறோம்.

தலைவர் பிரபாகரனின் தந்தையாரின் மரணத்திலே எனக்கு சந்தேகம் இருந்தது. உடனடியாக மரண விசாரணை நடத்தப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்படவேண்டும் எனும் கோரிக்கையை அக்கால அரசாங்கத்திடம் வைத்திருந்தேன். அதன் பின்னர் சில நிபந்தனைகளின் அடிப்படையில் உடலம் வழங்கப்பட்டது.

தலைவர் பிரபாகரனுடைய அக்கா விநோதினி ராஜேந்திரன் கனடாவில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்களுடைய மைத்துனர் சிவாஜிலிங்கத்திடம் எங்களுடைய தந்தையாரின் பூதவுடலையும் தாயாரையும் ஒப்படையுங்கள் எனக் கேட்டதற்கமைவாகவே, அரசாங்கம் என்னிடம் ஒப்படைக்க தீர்மானித்தது.

தலைவரின் மனைவியின் தாயாரை மாலைதீவில் கொண்டுபோய் கொடுத்த சிறிது காலத்தின் பின் மதிவதனியின் அக்கா “ குடும்பம் அழியவில்லை மீதி இருக்கிறது” என்ற செய்தியை அவர் என்னிடம் கூறியிருந்தார்.

அதன் அர்த்தம் என்னவென்றால் ஆகக் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்றாக இருக்கலாம் என்பதுதான் அந்தச் செய்தி.

அவர் இதனைக் கூறிய பொழுது நான் எதிர் கேள்விகளை கேட்கவில்லை. ஏனெனில் ரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால்” - என்றார்.