100 ற்கும் மேற்பட்ட மாணவிகளின் சட்டையை கழற்றிய பாடசாலை : இந்தியாவில் பரபரப்பு சம்பவம்


பாடசாலை விதிமுறைகளை மீறியதாக தெரிவித்து 100 ற்கும் மேற்பட்ட மாணவிகளின் சட்டையை கழற்றுமாறு தெரிவித்த பாடசாலை நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் இந்தியாவின்(iனெயை) ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்பாத் நகரில் உள்ள கார்மெல் பாடசாலையில் நடந்துள்ளது.

 ஜார்க்கண்ட்டில் தன்பாத் நகரில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் கடந்த வியாழக்கிழமை பேனா தினத்தை கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் சட்டைகளில் வாழ்த்துகளை எழுதி கொண்டாடினர்.

இந்த நிலையில், பாடசாலை நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும்விதமாக மாணவிகள் செயல்பட்டதாக பாடசாலை முதல்வர் கூறியதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், தங்கள் மாணவிகள் அழுக்கு உடைகளோடு வெளியில் செல்வதை விரும்பவில்லை என்று கூறிய பாடசாலை நிர்வாகம், 100-க்கும் மேற்பட்ட 10ஆம் வகுப்பு பாடசாலை மாணவிகளின் சட்டையைக் கழற்ற வற்புறுத்தியுள்ளனர்.

பாடசாலை சென்ற மாணவிகள் வெறும் மேலாடையுடன் வீட்டுக்கு வருவதை அறிந்த மாணவிகளின் பெற்றோர், பாடசாலை நிர்வாகத்தின் மீது துணை ஆணையர் அலுவலகத்தில் சனிக்கிழமை முறைப்பாடு செய்தனர்.  

ஆண் ஆசிரியர்களுக்கு மத்தியில் மாணவிகள் சட்டையைக் கழற்றக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால், மாணவிகள் மனதளவில் பாதிக்கப்பட்டதுடன், மீண்டும் பாடசாலைக்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனர். மாணவிகள் மீதான இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின்போது, மாணவிகளின் கையடக்கத்தொலைபேசிகளும் பறிக்கப்பட்டுள்ளன. பாடசாலை நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மன்னிக்க முடியாதவை’’ என்று தனது முறைப்பாட்டில் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்தவற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதுடன், விசாரணையின் முடிவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை ஆணையர் மாதவி மிஸ்ரா தெரிவித்தார்.