சம்பந்தனின் பதவி ஆசையே கட்சியை தடம்புரட்டியது - தமிழரசின் பிரமுகர் கடும் விமர்சனம்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக அண்மைக் காலங்களாக கருத்துக்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், இந்த விடயம் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணிமான கே.வி.தவராசா பதில் வழங்கியுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் கொள்கைப் பிறழ்விற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரே காரணம் என யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் ஊடக சந்திப்பை நடத்திய அவர் கூறினார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் எந்த முரண்பாடுகளோ, பிளவுகளோ இல்லை. சகலரும் ஓரணியாகச் செயற்படுவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயகக் கட்சி. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிட முழு உரிமை உண்டு. ஒரு சிலரின் கருத்துக்களை வைத்துக் கொண்டு கூட்டமைப்பு எம்பிக்களுக் கிடையி ல் முரண்பாடு, பிளவு என்று எடை போடக் கூடாது. உறுப்பினர்களுக் கிடையில் எந்த முரண்பாடும், பிளவும் இல்லை எனக் கூறியிருந்தார்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஒற்றுமையோ பலமோ இல்லை என்ற நிலைப்பாட்டை அண்மையில் உருவான ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் வெளிப்படுத்தியிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றாக இருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியாக, எமது இனத்திற்கான பலம் பொருந்திய கட்டமைப்பாக தோற்றம் பெறவேண்டும் என்ற கோரிக்கையை மறுதலித்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியாக உருவாக்குவதற்கு மறுப்புத் தெரிவித்தும் தானாகவே அதிலிருந்து வெளியேறியதால் கீழ்காணும் கட்சிகள் தமிழ் மக்களின் நலன்களையும் நம்பிக்கையையும் காப்பாற்றும் பொருட்டு, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக  பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் செயலாற்றி வந்த தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளும் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றிற்கிடையில் இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கிவரும் பல்வேறு கட்சிகள் 2001ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட்டு வருகின்ற போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்டமைக்கப்பட்ட அரசியல் நிறுவனமாக இல்லாமையினால், மேற்கூறிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்டமைக்கப்பட்ட வலுவான அரசியல் சக்தியாக உருவாக்குவதற்குத் தீர்மானித்திருக்கின்றன.

இவ்வாறான பிளவுகளை ஏற்படுத்தியதில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் இது தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.