சம்மாந்துறையில் இரு அரசியல் கட்சிகளுக்கிடையில் நேற்று நள்ளிரவு மோதல்


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான நாய்குட்டியர் சந்தி பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் பலர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திங்கட்கிழமை(14) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் காயமடைந்த தேசிய காங்கிரஸின் வீரமுனை  வட்டார வேட்பாளர் ஏ.சி.எம்.சஹீலை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த தேசிய காங்கிரஸ்  தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

 முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வருகை தந்து சென்ற பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உட்பட ஆதரவாளர்களால்  வீரமுனை  வட்டார வேட்பாளர் ஏ.சி.எம்.சஹீல் உட்பட அவரது ஆதரவாளர்கள் தாக்குதலுக்கு  உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்  தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.இச்சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் அம்பாறை மாவட்டத்தில் முதலாவது தேர்தல் வன்முறை சம்பவமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே நேரம் நீண்டதொரு அரசியல் வரலாற்றை கொண்ட சம்மாந்துறை மண்ணில் இவ்வாறான புதிய கட்சிகளின் வருகையினால் இடம்பெறும் வன்முறை கலாச்சாரங்கள், மாமூல் அரசியல் கலாச்சாரங்கள் மற்றும் அரசியல் முகவர்கள் மூலம் வாக்குகளை பேரம் பேசும் அரசியல் கலாச்சாரம் உள்நுழைந்திருப்பது சம்மாந்துறை அரசியலுக்கு பாரிய இழுக்காகும் என்றும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகத் தலைவரும் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தலைவருமான உதுமான் கண்டு நாபீர் தெரிவித்தார்.