புடினை கடுமையாக விமர்சித்த ரஷ்ய எம்.பி..! இந்தியாவில் மர்ம மரணம் - தொடரும் விசாரணை


புடினின் உக்ரைன் போரை கடுமையாக விமர்சித்த ரஷ்யாவின் பணக்கார எம்.பி. இந்தியாவில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் பணக்கார எம். பி.களில் ஒருவரும், அதிபர் விளாடிமிர் புட்டினின் தீவிர விமர்சகருமான பாவெல் அன்டோவ் (Pavel Antov), இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் உள்ள விடுதியில் இருந்து மர்மமான முறையில் விழுந்து இறந்து கிடந்தார்.

கோடீஸ்வரர் பாவெல் அன்டோவ் தனது 66 ஆவது பிறந்த நாளைக் கொண்டாட ஒடிசாவின் Rayagada பகுதியில் விடுமுறையில் இருந்தார்.

அவர் மாடியில் இருந்து குதித்ததாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், ரஷ்ய தூதரக ஜெனரல் அலெக்ஸி இடம்கின், அவர் ஜன்னலில் இருந்து விழுந்ததாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அவரது மரணம் குறித்த விசாரணையை உன்னிப்பாகப் பின்பற்றுவதாகவும் மற்றும் ஒடிசா காவல்துறையினரிடமிருந்து அனைத்து தகவல்களையும் பெற்றுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வியாழன் அன்று மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்படும் அவரது கட்சி சகாவான விளாடிமிர் புடானோவ் (61) மர்மமான முறையில் இறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இவர் இறந்துள்ளார்.

உக்ரைன் மீதான புடினின் போரை கடுமையாக எதிர்த்தவர்களில் அன்டோவ்வும் ஒருவர் ஆவார். கடந்த ஜூன் மாதம், ஒரு சமூக வலைதள பதிவில், உக்ரைன் மீதான போர் மற்றும் விமானத் தாக்குதல்களை ரஷ்ய "பயங்கரவாதம்" என்று அவர் விமர்சித்தார்.

ஆனால் இறுதியில், பெரும் அழுத்தத்திற்கு ஆளானதையடுத்து அவர் தனது அறிக்கையை திரும்பப் பெற வேண்டியதாயிற்று. மேற்கத்திய ஊடகங்கள் அவர் ஒரு "குழப்பமான மன்னிப்பு" வெளியிட்டதாக செய்தி வெளியிட்டது.

அவரது பதிவு "துரதிர்ஷ்டவசமான தவறான புரிதல்" மற்றும் "தொழில்நுட்பப் பிழை" என்று அவர் கூறினார். மேலும் அவர் "எப்போதும் புடினை ஆதரிப்பதாக" கூறினார்.