ரஷ்யா மூர்க்கத் தனம்..! 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீட்பு - கலக்கத்தில் ஜெலென்ஸ்கி


உக்ரைனின் தென் பிராந்தியத்திலுள்ள நோவா ககோவ்கா அணை தகர்ப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அவசர பணியாளர்கள் மீது ரஷ்யா எறிகணை தாக்குதல்களை நடத்துவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோடிமீர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

வெள்ளம் ஏற்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை ரஷ்யப் படையினர் கைவிட்டுள்ளதாகவும் உக்ரைன் அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும் ரஷ்யாவின் எறிகணைத் தாக்குதல்களுக்கு மத்தியில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் வொலோடிமீர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் இராணுவத்தினர் மற்றும் விசேட சேவைப் பிரிவினர் முடிந்தவரை மக்களை மீட்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளதாகவும் இது பேரழிவு நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் வொலோடிமீர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

நோவா ககோவ்கா அணையின் அழிவால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் கைவிடப்பட்ட மக்களை உதவுவதற்கு உடனடியாக முன்வர வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேச மனிதாபிமான அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தப் பயங்கரமான சூழ்நிலைகளில் ஆக்கிரமிப்பாளர்கள் மக்களை கைவிட்டுள்ளதாகவும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குவோர் இல்லாமல் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் கூரைகளின் மீது ஏறியுள்ளதாகவும் உக்ரைன் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அணை தகர்ப்பு அனர்த்ததை அடுத்து ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியன விரைந்து செயற்படாமை குறித்து உக்ரைன் அதிபர் வொலோடிமீர் ஜெலென்ஸ்கி விசனம் தெரிவித்துள்ளார்.