ஒப்பந்தத்தை மீறி ரஷ்யா தாக்குதல் நடத்துகிறது- உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு!

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் இன்று 150 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் உக்ரைனின் மத்திய பகுதியில் ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது,அங்குள்ள விமானப்படை தளம் மற்றும் ரயில்வே கட்டமைப்பை குறிவைத்து சரமாரியாக ஏவுகணைகளை தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே தெற்கு உக்ரைனில் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை குறிவைத்து உக்ரைன் இராணுவமும் தாக்குதல் நடத்தியுள்ளது.மேலும் ரஷிய படைகளின் நடமாட்டத்தை தடுக்கும் விதமாக தெற்கு கெர்சான் பிராந்தியத்தில் உள்ள டினீப்பர் ஆற்றுபாலத்தை உக்ரைன் வீரர்கள் தகர்த்தியுள்ளனர்.

இதேவேளை தானிய ஏற்றுமதிக்காக கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைனிய துறைமுகங்களை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகி சில மணி நேரத்துக்குள் கருங்கடல் பகுதியில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.கருங்கடல் துறைமுகத்தில் தாக்குதல் நடத்தியமை ஒப்பந்தத்தை மீறும் நடவடிக்கை என உக்ரைன் ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ள அதேநேரம் ரஷியாவிற்கு ஐ.நா.கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.