தங்களது வான் எல்லையில் 36 நாடுகளின் விமானங்கள் பறப்பதற்கு ரஷ்யா தடை!

தங்களது வான் எல்லையில் 36 நாடுகளின் விமானங்கள் பறப்பதற்கு ரஷ்ய பொது விமானப் போக்குவரத்து அமைப்பு தடை விதித்துள்ளது.ரஷ்ய பொது விமானப் போக்குவரத்து அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ ஐரோப்பிய நாடுகள், கனடா உள்ளிட்ட 36 நாடுகள் தங்களது வான் எல்லையைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.உக்ரைன் மீதான படையெடுப்பைக் கண்டிக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் தங்களது வான் எல்லை வழியாக ரஷ்ய விமானங்கள் பறப்பதற்குத் தடை விதித்தன. அதற்குப் பதிலடியாகவே ரஷ்யா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.முன்னதாக அமெரிக்காவைப் பின்பற்றி பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா என 30க்கும் மேற்பட்ட நாடுகள் அடுத்தடுத்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. பொருளாதாரத் தடைகள் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அடக்கம்.இதனிடையே சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் ரஷ்யா மீதான உலக நாடுகளின் பொருளாதார தடைகள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொருளாதார தடைகளை பயன்படுத்துவதை சீனா எதிர்க்கிறது. அதுவும் சர்வதேச சட்டங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக இத்தகைய தடைகளை கடுமையாக எதிர்க்கிறது’ என கூறினார்.