267 ஆளில்லா விமானங்களை கொண்டு உக்ரேனை தாக்கிய ரஸ்யா : அதிர்ச்சியில் ஜெலன்ஸ்கி



ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான போர் நேற்றுடன் மூன்று ஆண்டுகளை எட்டியுள்ளது.

ஐரோப்பிய யூனியனின் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உக்ரேன் இணைவதற்கு எதிராக ரஷியா தங்கள் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணத்தை கூறி ரஷியா 2022 இல் போரை தொடங்கியது.

இந்நிலையில் ரஷியா இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய தாக்குதலை உக்ரேன் மீது நடத்தியுள்ளது.

 உக்ரேன் அதிகாரிகளின் கூற்றுப்படி, நேற்று முன்தினம் ஒரே நாளில் ரஷியா 267 ஆளில்லா விமானங்களை உக்ரேன் மீது ஏவியது. இது இதுவரை உக்ரேன் மீது நடந்தேறாத மிகப்பெரிய வான்வழித் தாக்குதலாகும்.

 
இந்தத் தாக்குதல்கள் உக்ரேனின் 13க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவற்றில் கார்கிவ், பொல்டாவா, சுமி, கீவ், செர்னிஹிவ், மைகோலைவ் மற்றும் ஒடெசா ஆகியவை அடங்கும்.

உக்ரேன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட் கூறுகையில், “ரஷியா ஏவிய 267 ஆளில்லா விமானங்களைில் 138 இடைமறிக்கப்பட்டன.

 இருப்பினும், இந்த தாக்குதலின் போது மூன்று போல்ஸ்டிக் ஏவுகணைகளையும் உடன் ஏவி, உக்ரேனின் ஐந்து நகரங்களில் ரஷியா சேதம் விளைவித்தது.

 
இந்தத் தாக்குதலின் போது, உக்ரேனின் வான் பாதுகாப்பு அமைப்பு பல ரஷிய ஆளில்லா விமானங்களை அழித்தது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உக்ரேன் வெளியுறவு அமைச்சகம் இந்த சம்பவத்தின் காணொளியை வெளியிட்டுள்ளது.

 ரஷியாவின் தாக்குதலை உக்ரேன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கண்டித்துள்ளதுடன், கடந்த வாரத்தில் மாத்திரம் ரஷியா 1,150 ஆளில்லா விமானங்கள், 1,400 க்கும் மேற்பட்ட வான்வழி வெடிகுண்டுகள் மற்றும் 35 ஏவுகணைகளை உக்ரேன் மீது வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.


உக்ரேன் போருக்கு தீர்வு காண சவுதி அரேபியாவில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரேன் அழைக்கப்படவில்லை. இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. உக்ரேனை நேட்டோ நாடுகளுடன் சேர்த்தால் தனது ஜனாதிபதி பதவியை விட்டுக்கொடுப்பதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.