ரணிலின் ஆட்சி இம்மாத இறுதியில் வீழ்ச்சியடையும் என சூளுரை



அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி இந்த மாத இறுதியில் வீழ்ச்சியடைய ஆரம்பிக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவு தலைவியுமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அதிபரின் ஆட்சியை நிறைவு செய்யும் வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக நேற்று அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் குடிசார் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதன்பொது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “அதிபர் ரணில் விக்ரமசிங்க தம்மை எந்த விதத்தில் பாதுகாத்துக்கொள்ள முயன்றாலும் அவரால் அதை செய்ய முடியாது. மக்கள் ஒன்று கூடுவதை தடுக்க அதிபர் எடுக்கும் முயற்சிகளும் இந்தத் தடவை தோல்வியடையும்.

வீடுகளில் இருக்கும் பெற்றோரை போராட்டங்களுக்கு அழைக்கும் முகமாகவே அண்மையில் காலிமுகத்திடலில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தை ரணில் விக்ரமசிங்க தாக்கியிருந்தார்.

ரணில் விக்ரமசிங்க அண்மையில் சிறுவர்களை போராட்டங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்க்குமாறு கூறியிருந்தார். சிறுவர்களை பெற்றோர் தங்கள் பாதுகாப்புக்காக பயன்படுத்துகிறார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

எனினும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அவ்வாறு ஒருபோதும் பயன்படுத்த மாட்டார்கள். சிறுவர்களை வீட்டில் பார்த்துக் கொள்ள ஒரு நபர் இல்லாவிட்டால் பெற்றோர் நிச்சயம் அவர்கள் பிள்ளைகளை போராட்டங்களுக்கு அழைத்து வருவார்கள்.

சிறுவர்கள் போராட்டங்களில் கலந்துகொள்ளக் கூடாது என எந்தவொரு சட்டமும் இலங்கையில் கூறவில்லை. பிள்ளைகளுக்கு தங்கள் உரிமைகளுக்காக போராட உரிமையுண்டு.

இலங்கையில் உள்ள பெற்றோர் போராடுவது தங்கள் குழந்தைகளுக்காகவும் அவர்களின் எதிர்காலத்துக்காகவுமே. இலங்கையில் எதிர்காலத்தில் போஷாக்கின்மை மேலும் அதிகரிக்கும். இவ்வாறான நிலைக்கு மக்களை தள்ளியிருக்கும் போது அந்த அரசாங்கத்தை மக்கள் எதிர்ப்பது சாதாரணமான ஒன்றாகும்.

ராஜபக்ச ஆட்சியாளர்களை பாதுகாப்பதற்காக பதவியேற்ற அதிபர் ரணில் விக்ரமசிங்கவை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கடந்த காலங்களில் இலங்கையில் நடைபெற்ற போராட்டங்களில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் கலந்துகொண்டார்கள். அப்போது அதனை ஆதரித்த ரணில் விக்ரமசிங்க தற்போது அதனை எதிர்க்கிறார்” என்றார்.