யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து கோர விபத்து : வத்தேகமவில் மற்றுமொரு அரச பேருந்தும் குடை சாய்ந்தது

சிலாபம்- புத்தளம் வீதியில், தேதுரு ஓயா பாலத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (04) பகல் 11:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான பேருந்து, பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்தது.

இந்த விபத்து காரணமாக, சிலாபம் - புத்தளம் வீதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



இதேநேரம் கண்டிக்கு குடுகல வழியாக பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின்   பேருந்து, நேற்று வத்தேகம, அரலிய உயன பகுதிக்கு அருகில், வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில்  15 பயணிகள் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் வத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து நடந்த நேரத்தில், சுமார் 25 பயணிகள் பேருந்தில் இருந்தனர். பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென தனது இருக்கைக்கு அருகில் இருந்த கதவு திறந்ததால், ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் கண்டி மாவட்ட மேலாளர் சனத் பிரசன்ன தெரிவித்தார்.

அவர் பேருந்தின் கதவை மூட முயன்றபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்த பயணிகள் சீரான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேநேரம் வீதியில் சென்று கொண்டிருந்த ‘சிசு சரிய’ பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரின் சேவைகளை தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்க வடமேற்கு மாகாண போக்குவரத்து ஆணையம் முடிவு செய்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் போது, சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவான மற்றும் பொறுப்பற்ற விதமாக வாகனம் செலுத்தியதே  இந்த விபத்திற்குக் காரணம் என்பது கண்டறியப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தப் பேருந்தில் பயணிக்கும் பாடசாலை  மாணவர்களைக் கருத்தில் கொண்டு, வேறு சாரதி மற்றும் நடத்துனரைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.