அதிகரிக்கும் பதற்றம் - ரஷ்யாவின் மற்றுமொரு கப்பலை தகர்த்தது உக்ரேன்


உக்ரேன் கடல்படையின் சிறப்பு பிரிவான குரூப் 13, ரஷ்யாவின் புதிய ரோந்து கப்பலை கடுமையாக தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.


கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் ரோந்து கப்பல் நிறுத்தப்பட்டு உக்ரேனுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த நிலையில், ஜனாதிபதி புடினின் புதிய ரோந்து கப்பலை உக்ரேன் தாக்கி அழித்துள்ளது.


இதுதொடர்பாக உக்ரேன் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,


ரஷ்யாவின் மற்றொரு கப்பல், நீர்மூழ்கி கப்பலாக மேம்படுத்தப்பட்டு உள்ளது. எனினும், உக்ரேனின் சிறப்பு பிரிவான குரூப் 13, ரஷ்யாவின் ரோந்து கப்பலை தாக்கியது.


இதில்சுமார் 2000 ஆயிரம் கோடி பெறுமதியான செர்கெய் கொடோவ் என்ற அந்த கப்பலை, உக்ரேன் கடற்படையின் ஆளில்லா விமானங்களான மகுரா வி5 தாக்கியுள்ளன.


இதில், கப்பலின் விளிம்பு பகுதி, வலது மற்றும் இடது புறங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 


இந்த தாக்குதல் இனிமையான நாளின் தொடக்கம். வீரர்களே, சிறந்த பணியை செய்திருக்கிறீர்கள் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதேவேளை கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் அறுவர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரேன் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.


மேலும் ரஷ்ய - உக்ரேன் போரின் ஆரம்பத்திலிருந்து இதுவரை சுமார் 13 ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த மாதம், மற்றொரு ரஷ்ய கப்பலான சீசர் குனிகோவ், யால்டா நகருக்கு தெற்கே ஆளில்லா விமான தாக்குதலில் மூழ்கியிருந்தது.


இந்நிலையில் தற்போது  உக்ரேன் படை ரஷ்யாவின் புதிய ரோந்து கப்பலை கடுமையாக தாக்கி சேதப்படுத்தியுள்ளமையானது பிராந்திய பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.