ரிஷி சுனக் வெளியிட்ட காணொளியால் பரபரப்பு - மக்களிடம் கோரப்பட்ட மன்னிப்பு


பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், பாதுகாப்பு பட்டி அணியாமல் மகிழுந்தில் சென்றதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்டு, சமூக வலைதளங்களில் காணொளி ஒன்றை பதிவு செய்துள்ளார்.

சிறிது தூரமாக இருந்தாலும் பாதுகாப்பு பட்டி அணியாமல் மகிழுந்தில் தான் சென்றதாகவும், ஆனால் அது தனது தவறு என்றும், அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டதாகவும் பிரதமர் பின்னர் விளக்கமளித்தார்.

பிரதம மந்திரி சுனக், மகிழுந்தில் பயனம் செய்து, தனது புதிய கொள்கைகள் மற்றும் அவை செயல்படுத்தப்படுவதைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்கும் ஒரு நிமிட காணைாளியை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றியிருந்தார்.

குறித்த காணொளியை பார்த்த பலர் கொள்கைகளை அமல்படுத்துவதற்கு முன் பிரதமர் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு பட்டி அணியாதது தவறு என்று சுட்டிக் காட்டிய காணொளியை பார்த்த பலரும் பிரதமரை குற்றம் சாட்டினர்.

பிரிட்டனில் குறித்த குற்றத்திற்கு £100 முதல் £500 வரை அபராதம் விதிக்கப்படும். மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே பாதுகாப்பு பட்டி அணியாது இருக்க முடியும்.

அரசாங்கத்தின் புதிய கொள்கைகளின் கீழ் செயல்படுத்தப்படும் 10 வெவ்வேறு திட்டங்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்கும் நோக்கத்துடன் பிரதமர் ரிஷி சுனக் குறித்த காணொளியைில் தோன்றியுள்ளார்.

அப்போது, காவல்துறை உந்துருளி பாதுகாப்புடன் பிரதமரின் மகிழுந்து சென்று கொண்டிருந்தது. அப்படியிருந்தும், பிரதமர் ரிஷி சுனக் பாதுகாப்பு பட்டி அணியாமல் பயணிப்பது குறித்து காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.