மன்னர் சார்லஸை விடவும் அதிக சொத்து மதிப்பு கொண்ட ரிஷி சுனக் தம்பதி


பிரித்தானிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான ரிஷிசுனக் மற்றும் அவரது கோடீஸ்வர தம்பதி மன்னர் சார்லஸை விடவும் அதிக சொத்துக்கள் கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய பிரதமர் இல்லமான 10 டவுனிங் தெருவில் புதிய பிரதமரான ரிஷி சுனக் மற்றும் அவரது கோடீஸ்வர மனைவி அக்‌ஷதா ஆகியோர் குடியேற உள்ளனர். இதுவரை 10 டவுனிங் தெருவில் பல பிரதமர்கள் மற்றும் அவர்களது மனைவிமார் அல்லது துணை குடியேறியிருந்தாலும், முதன்முறையாக ஒரு கோடீஸ்வர தம்பதி குடியேற இருக்கிறார்கள்.

கோடீஸ்வர வாரிசான 42 வயது அக்ஷதா தமது தந்தையின் ஐடி சாம்ராஜ்யத்தில் சுமார் 430 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு பங்குதாரர் ஆவார். மட்டுமன்றி, பிரித்தானிய பிரதமர் இல்லத்தில் குடியேறும் முதல் இந்து மத நம்பிக்கையாளர்கள் இவர்கள்.

ரிஷி சுனக் மற்றும் அக்‌ஷதா தம்பதியின் மொத்த சொத்துமதிப்பு சுமார் 730 மில்லியன் பவுண்டுகள். பள்ளிப்படிப்புக்கு பின்னர் அமெரிக்காவுக்கு சென்ற அக்‌ஷதா, கலிபோர்னியாவில் உள்ள கிளேர்மாண்ட் மெக்கென்னா கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் பிரெஞ்சுப் பட்டப்படிப்பை முடித்தார். MBA படிக்க ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் சென்ற நிலையில், தமது வருங்கால கணவரை சந்திந்தார் அக்‌ஷதா. நான்கு வருடங்களுக்கு பின்னர், 2009ல் இந்தியாவில் வைத்து இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

அதன் பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியாவின் பெங்களூருவில் ரிஷி சுனக்- அக்‌ஷதா தம்பதி வசித்து வந்துள்ளனர். இதனிடையே 2007ல் அக்‌ஷதா நிறுவிய நிறுவனம் ஒன்று மூன்றாண்டுகளில் கடும் இழப்பை சந்தித்து கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இருப்பினும், பல்வேறு தொழில் நிறுவனங்களில் அக்‌ஷதா பங்குதாரராக தம்மை இணைத்துக்கொண்டுள்ளார்.

2013ல் ரிஷி- அக்‌ஷதா தம்பதி பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தது. தொடர்ந்து 2015ல் யார்க்ஷயரில் உள்ள ரிச்மண்ட் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக ரிஷி சுனக் தெரிவானார். தற்போது கென்சிங்டன் பகுதியில் 7 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான குடியிருப்பு ஒன்றில் ரிஷி சுனக் தம்பதி தங்கள் பிள்ளைகள் இருவருடன் வசித்து வருகிறார்கள். கென்சிங்டன் பகுதியில் 1 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான குடியிருப்பு ஒன்றும் இவர்களுக்கு சொந்தமாக உள்ளது. யார்க்ஷயர் தொகுதியில் 2 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான குடியிருப்பு ஒன்றும், கலிபோர்னியாவில் 5.5 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான பண்ணை வீடும் இவர்களுக்கு சொந்தமாக உள்ளது.