வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கங்கள் கொழும்பில் உள்ள மத்திய அஞ்சல் பரிமாற்றத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
இலங்கை ஆசிரியர் சங்கம், தொழிலாளர் போராட்ட மையம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (22) காலை ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் காரணமாக மத்திய தபால் நிலையத்தைச் சுற்றி விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
பொதிகளை அனுப்பத் தயாராகும் ஊழியர்களின் கடமைகளுக்கு சில நபர்கள் இடையூறு விளைவித்ததால், கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இதேநேரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்கப்பட மாட்டாது என தபால் மாஅதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.
மாதாந்த சம்பளம் வேண்டுமென்றால், உடனடியாக சேவைக்கு வருமாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அவர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கும் இது குறித்து எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, வேலைநிறுத்தம் காரணமாக இதுவரை சுமார் 140 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.
எனினும், மத்திய அஞ்சல் பரிவர்த்தனையில் குவிந்துள்ள தபால் பைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.