குருந்தூர் மலையில் மற்றுமொரு புத்த விகாரை - ரகசிய சந்திப்பில் கூட்டாக தீர்மானம்

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புதிதாக சிவன் ஆலயம் ஒன்றை அமைக்க இந்து பௌத்த அமைப்புக்கள் கூட்டாக தீர்மானித்துள்ளன.

அதேநேரம் குருந்தூர் மலையில் சிறிலங்கா தொல்லியல் திணைக்களம் உரிமை கோராத பகுதியில் புதிய விகாரையும், அதனுடன் இணைந்தாக சிவன் ஆலயமும் அமைக்கப்படவுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

ஏற்கனவே அங்கு சட்டவிரோதமான முறையில் அமைக்கப்படும் விகாரையால் பாரிய முரண்நிலைகள் ஏற்பட்ட நிலையில், இன்று இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இன்று (17) யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பெளத்த இந்து அமைப்புகள் இதனை அறிவித்தன.

நாளைய தினம் (18) குருந்தூர் மலையில் சைவர்கள் பொங்கலில் ஈடுபடவுள்ள நிலையில், அது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெறவில்லை ஊடகவியாலளர்களின் கேள்விக்கு பதிலளித்தனர்.

இதன்போது ஆரியகுளம் நாக விகாராதிபதி, குருந்தூர் மலை விகாராதிபதி, தையிட்டி விகாராதிபதி, நாவற்குழி விகாராதிபதி உள்ளிட்ட சைவ இந்து அமைப்புகள் பலரும் கலந்துகொண்டனர்.