காசாவை ஆக்கிரமிப்பது இஸ்ரேலுக்கு நல்லதல்ல! வெள்ளை மாளிகை பகிரங்க எச்சரிக்கை

காசாவை இஸ்ரேல் படைகள் மீண்டும் ஆக்கிரமிப்பது என்பது இஸ்ரேலுக்கோ அல்லது இஸ்ரேல் மக்களுக்கோ நல்லதல்ல என ஜோ பைடன் நினைப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை பாதுகாப்பு சபையின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பை தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றிலேயெ அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

போர் முடிந்ததும், வருங்காலத்தில் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் காசா முனை பகுதியில் பாதுகாப்பை கவனிக்க வேண்டிய தேவை இஸ்ரேலுக்கு உள்ளது என இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்தையும் கடந்துவிட்டுள்ள இஸ்ரேல் - ஹமாஸ் போரினால் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், உலக நாடுகள் பலவும் போர் நிறுத்தத்தை கோரியுள்ளன.

மேலும் இது தொடர்பில் ஜான் கிர்பை கூறுகையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி பிளிங்கன் நடத்திய பேச்சுவார்த்தைகள், மோதலுக்கு பின் காசா எப்படி தோற்றமளிக்கும்? காசாவில் ஆட்சிமுறை எப்படி இருக்கும்? என்பது பற்றி இருந்தது. ஏனெனில், அது எப்படியிருப்பினும், ஓக்டோபர் 6-ஆம் திகதிக்கு முன் இருந்தது போன்று இருக்க முடியாது. அது ஹமாஸ் அமைப்பினராக இருக்காது எனவும் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜோ பைடன், காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது என்பது ஒரு பெரிய தவறாகி விடும் என கடந்த மாதம் கூறியிருந்ததை தொடர்ந்து அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் ஹெர்ஜாக் போர் முடிந்ததும் காசாவை ஆக்கிரமிக்கும் நோக்கம் இஸ்ரேலுக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகையால் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.