மன்னாரில் சர்ச்சை : பெண் உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு விளைவித்த ரெலோ உறுப்பினர்


ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் (Selvam Adaikalanathan) பிரத்தியேக செயலாளர் ஒருவர் பெண் உத்தியோகத்தர் ஒருவரின் அரச கடமைக்கு இடையூறு விளைவித்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்றையதினம் மாலை (11) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மன்னார் நகரசபை எல்லைப் பகுதிக்குள் நீண்ட நாட்கள் சோலை வரி செலுத்தாத வீடுகளுக்கு இரு பெண் உத்தியோகத்தர்கள் நேற்றையதினம் உரிய ஆவணங்களுடன் வரி சேகரிக்க சென்றுள்ளனர். 

இந்த நிலையில் மன்னாரின் (Mannar) பிரதான ரெலோ அலுவலகம் அமைந்துள்ள வீட்டின் உரிமையாளரும் வரி செலுத்தாமையினால் குறித்த வீட்டினுள் சென்று ஊழியர்கள் வரி தொடர்பில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த அலுவலகத்தில் இருந்த நபர் குறித்த பெண்களுடன் முரண்பட்டதுடன் வெளியே துரத்தியுள்ளார்.

அதேநேரம் சம்மந்தப்பட்ட நபரின் பிறிதொரு கடை தொடர்பில் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் ஒரு பெண் உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு விளைவித்து வெளியே அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் சம்பந்தபட்ட பெண் மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளதுடன் தாக்குதலை மேற்கொண்ட நபரும் தன்னை நியாயப்படுத்தும் முகமாக காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் கட்சி அலுவலகத்தில் இருந்த ஏனையவர்களுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.