‘‘LTTE யுடன் தொடர்புபட்டவர்களே அழைக்கப்பட்டிருந்தார்கள்..’’ அல்ஜசீரா நேர்காணல் குறித்து ரணில் விளக்கம்

 


அல்ஜசீரா செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணல் முழுமையாக ஒளிபரப்பப்படவில்லை. அதில் கூறப்பட்ட முக்கிய விடயங்கள் வெளியாகவில்லை.  அம்பிகா சற்குணநாதன்  நேர்காணலில் கலந்து கொள்வாரென முன்னர் கூறப்பட்டிருந்த போதிலும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் அதற்கு அழைக்கப்பட்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான நேர்காணலை அல்ஜசீரா செய்தி சேவை நேற்று   வியாழக்கிழமை ஒளிபரப்பியிருந்தது. எனினும் அதில் தன்னால் கூறப்பட்ட கருத்துக்கள் பல துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அவை தொடர்பில் விளக்கமளித்த போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விளக்கமளித்துள்ள அவர்,


எமது நாட்டு ஊடகங்கள் நேர்காணல்களை நேரடி ஒளிபரப்பு செய்யும். ஆனால் அல்ஜசீரா 2 மணித்தியாலங்கள் ஒளிப்பதிவு செய்த நேர்காணலில் குறிப்பிட்ட சில விடயங்களை மாத்திரமே ஒளிபரப்பு செய்துள்ளது. அதில் நான் பல முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டிருந்தேன். எவ்வாறிருப்பினும் அவை முழுமையாக வெளியிடப்படவில்லை. அவற்றை வெளியிட்டிருந்தால் இதனை விட தெளிவான விளக்கத்தைப் பெற்றிருக்க முடியும்.

நான் சென்ற போது எனக்கு வழங்கப்பட்டிருந்த 3 பெயர்களில் அம்பிகா சற்குணநாதனின்  பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தது. அது தொடர்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நாம் இருவரும் வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டவர்களாவோம். அவர் வருவார் என்று நான் எதிர்பார்த்திருந்த போதிலும், இறுதியில் மதுரா இராசரத்திணம் என்ற பெண்ணொருவரே வருகை தந்திருந்தார். அது தொடர்பில் எனக்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.

மதுரா இராசரத்திணத்தின் கணவர் அன்டன் பாலசிங்கத்துக்கு ஆலோசனை வழங்கியவராவார். இது தவறென்றால் மதுரா இராசரத்திணம் அதனை திருத்திக் கொள்ளலாம். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த இருவர் இந்த நேர்காணலில் பங்கேற்றிருந்தனர். பிரான்சிஸ் ஹெரிசனும் இதில் பங்கேற்றிருந்தார். யுத்தத்தின் போது 40, 000 பேர் கொல்லப்பட்டதாக கூறியமை பொய்யென நான் தெரிவித்தேன். அவ்வாறு மேலும் பல விடயங்கள் தொடர்பில் தெரிவித்திருந்தேன்.

அவற்றை நான் தற்போது இங்கு மீண்டும் கூறுவதால் பயனில்லை. இலங்கை பெரும்பான்மையானோர் பௌத்தர்கள் என்றும், நாம் அறிந்த பிரதான மதத் தலைவர் மல்வத்து பீட மகா நாயக்க தேரர் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
ஏனைய அனைத்து மதத் தலைவர்களும் அதாவது பேராயர் கர்தினால் அல்லது ஏனைய ஆயர்கள் அதற்கு அடுத்த நிலையிலுள்ளவர்கள் என்றும் நான் தெரிவித்தேன். ஆனால் அவை ஒளிபரப்பப்படவில்லை.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரத்தில் இல்லை என்பதற்காக கேள்விகளை புறக்கணித்து நான் பதிலளிக்காமல் இருக்கவில்லை. என்னிடம் ராஜபக்ஷ க் கள் தொடர்பிலேயே அதிகளவில் வினவப்பட்டது என்றார்.