அதிரடியாக கைதான ரணிலுக்கு பிணை


நிதி மோசடியில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று பிற்பகல் அழைத்துவரப்பட்டார். இதன்போது அங்கு பெரும் பரபரப்பான நிலைமை காணப்பட்டது.

இதன்போது அங்கு குழுமியிருந்த ஆதரவாளர்கள் சேர்.. எப்போதும் உங்களுடனேயே இருப்போம்" என கூறி அழுதனர்.


குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க கைவிலங்கில்லாமல் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தார். மேலும் இதன்போது அங்கு குழுமியிருந்த செய்தியாளர்கள் , புகைப்படப்பிடிப்பாளர்கள் அவர்களது கடமைகளை செய்ய அனுமதிக்குமாறும் பொலிஸாரிடம் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் உத்தியோகபூர்வ அழைப்பின்றி பிரித்தானியாவுக்கு விஜயம் செய்தபோது, 16.9 மில்லியன் ரூபா அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் கைது செய்யப்படுவார் என பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளர் சுதத்த திலகசிறி நேற்று முன்தினம் தெரிவித்திருந்ததோடு  அந்த செய்தி வீரகேசரியின் நேற்றைய பிரதான செய்தியில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவார் என்று  முன்கூட்டிய அறிவிப்பு,  நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளதாக கோட்டை நீதவான்,  மன்றில் அதிருப்தியை வெளியிட்டு இருந்தமை குறிப்பிடதக்கது.