வடக்கு - கிழக்கு தழுவிய ஹர்த்தால் குறித்து ரணில் தெரிவித்த விடயம்..!

"ஹர்த்தால் போராட்டமானது நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கி, நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்ற போராட்டமாகும்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவானது மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக கொண்டு வரப்படுகின்றது என தமிழ் காட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பி வருகின்றன, ஆனால் அதில் உண்மை இல்லை."

இவ்வாறு, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,

"முதலில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட பிறகுதான் அது தொடர்பில் கருத்துக்களை வெளியிடமுடியும், சட்டவரைவில் திருத்தங்களை செய்ய முடியும்.

இதனை விடுத்து, குறித்த சட்ட வரைவை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முன்பாகவே ஹர்த்தால் அனுஷ்டிப்பது, போராட்டங்களை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதவை.

குறித்த போராட்டங்களின் மூலம் மக்களின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டு, நாட்டின் பொருளாதாரமே பாதிக்கப்படும்.

ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ் அரசியல் கட்சிகள் சற்று சிந்தித்து செயல்படவேண்டும்." இவ்வாறு அதிபர் ரணில் கூறியுள்ளார். 

இதேவேளை, ஹர்த்தாலை முன்னெடுப்பதற்கு மற்றொரு காரணமாக வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்த – சிங்கள மயமாக்கலை தமிழ்க் கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

இது தொடர்பில் ஊடகங்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பி இருந்தன.

"தமிழ்க் கட்சிகளின் இந்தக் கோரிக்கை தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்வோம்.

வடக்கு – கிழக்கில் சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்பு நடைபெறுகிறது எனக் கூறப்படுவதை ஏற்க முடியாது” என அதிபர் ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.