தேர்தலை ஒத்திவைக்க சதியா? : ரணிலை விரட்டியடிப்போம் என சவால்

"ரணில் அரசுக்குத் தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் இல்லை. தேர்தல் அச்சத்தில் உள்ளதால் எப்படித் தேர்தலை நிறுத்தலாம் என்று ரணில் அரசு யோசிக்கின்றது." என்று சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

'நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக இருந்தால் இரண்டு முக்கிய விடயங்கள் தேவை. ஒன்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. அடுத்தது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் ஒக்டோபரில் நடத்தப்பட வேண்டும்.

 இந்த இரண்டு விடயங்களையும் செய்வதற்குக் காலம் போதாது.

முக்கிய பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காக அரசு இந்த மாதிரியான விடயங்களை வெறுமனே பேசுபொருளாக்குகின்றது.

 அரசுக்குத் தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் இல்லை. எப்படி தேர்தலை நிறுத்தலாம் என்று அரசு யோசிக்கின்றது. அப்படியான திட்டங்களில் ஒன்றுதான் இதுவும்." என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும், அப்படிச் செய்தால் மக்களுடன் வீதிக்கு இறங்கி ஜனாதிபதி ரணிலை ஓட ஓட விரட்டியடிப்போம் என்றும் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடுப் பகுதியில் இப்போதுள்ள ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிகின்றது.

இந்நிலையில், அரசமைப்பின்படி, அதற்கு முன்னதாகவே ஜனாதிபதித் தேர்தலை நடத்தி ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும்.

அந்தத் தேர்தலை ஒத்திப்போடுவதற்கோ அல்லது வேறு ஏதும் சதி செய்வதற்கோ இடம்கொடுக்கமாட்டோம். மக்களை வீதிக்கு இறக்கி இந்த அரசை விரட்டுவோம் எனவும் தெரிவித்தார்.

இதேநேரம் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை எப்படியாவது வெல்ல வைக்க வேண்டும் என்ற நோக்கில் ரணில் தரப்பு பலதரப்பட்ட வியூகங்களை வகுத்து வருகின்றது என்று ரணில் தரப்பு வட்டாரத்தில் இருந்து அறியமுடிகின்றது.

இதற்காக விரிவான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அனைத்து கட்சிகளுக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளது என்றும் அந்தத் தரப்பு மேலும் கூறுகின்றது.

விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அன்றி பொது வேட்பாளராகவே நிறுத்தப்படுவார் என்று ரணில் தரப்பு வட்டாரம் தெரிவிக்கிறது.

குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து வேட்பாளர் ஒருவரைக் களமிறக்காமல் ரணிலையே கமிறக்கும் வகையில் அக் கட்சியின் பிரசன்ன ரணதுங்க மற்றும் நிமால் லான்சா ஆகியோர் செயற்படுகின்றன.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஒன்றிணையும் செயற்பாடு தொடர்ந்தும் இழுபறியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள ஜனாதிபதி  தேர்தலில் தான் வேட்பாளராகக் களமிறங்கும் திட்டத்தில் மைத்திரி இருப்பதாலேயே இந்த இழுபறி நீடிக்கின்றது என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இதேவேளை இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சமிந்த வாஸ் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ஐக்கிய மக்கள் சக்தி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கட்டான தொகுதியின் அமைப்பாளர் பதவியும் சமிந்தக்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.