கோட்டாபயவின் வருகை குறித்து முடிவெடுத்தார் ரணில்..!


முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கலந்துரையாடலில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் பின்னரே நாடு திரும்ப கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்தாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோட்டாபய ராஜபக்ச இன்று நாடு திரும்பவுள்ளதாக வெளியான தகவல்கள் பொய்யானது எனவும் குறித்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 11 ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்ற கோட்டாபய ராஜபக்ச இம் மாத இறுதிக்குள் நாடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதேவேளை, தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியுள்ள கோட்டாபய, இன்று நாடு திரும்புவார் என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதருமான உதயங்க வீரதுங்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், தாய்லாந்தில் உள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் இலங்கை வருகை அடுத்த மாதம் (செப்டெம்பர்) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் முன்னர் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னரே, வருகை பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை என கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவும் முன்னர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச இலங்கை திரும்பும் திகதி உறுதியாக தெரியவராத நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் பின்னரே அவர் நாடு திரும்புவார் என தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.