ரணிலின் சதி வலைகளைத் தகர்த்தெறிய திடசங்கற்பம் - ரணிலை வீட்டிற்கு அனுப்பும் நாள்!


நாட்டு மக்களுக்குத் தேவையான தேர்தலொன்றுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 74 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நாட்டு மக்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.

ரணில் ராஜபக்சக்களின் தேர்தலை பிற்போடும் சதி வலைகளை தகர்த்தெறிந்து மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் தேவை உள்ளது என ஜே.வி.பியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடாபில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த வருடம் மே9, யூன்9, யூலை9களில் ராஜபக்சாக்களை வீட்டுக்கு அனுப்பியதைப் போன்று எதிர்வரும் 9, தேர்தல் முடிவு ரணில் ராஜபக்சாவை வீட்டுக்கு அனுப்பும் நாளாகும்.

ஆகவே மக்கள் உச்சரிக்கின்ற குரலாக தேசிய மக்கள் சக்தி காணப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தியானது திக்கற்று கிடக்கும் நாட்டு மக்களுக்கு திசைகாட்டி சின்னத்தில் திசைகாட்ட தயாராகின்றது.

ரணில் ராஜபக்ச அரசாங்கம் தேர்தல் ஆணையாளர்களை பதவி விலகவைத்து தேர்தலை நிறுத்தும் நாடகத்தை முன்னெடுக்கின்றனர். அந்த வகையில் தேர்தல் ஆணைக்குழு அதிகார பதவியிலிருந்து பி.எல் சாள்ஸ் பதவி விலகியிருந்தார்.

சாள்ஸ்க்கு நாம் கூறுவது தேர்தல் ஆணையகம் தேர்தலை நடத்துவதற்கான சுயாதீனமான அமைப்பாகும். தேர்தல் மக்களின் உரிமையாகும் ஆகவே சாள்ஸின் பதவி விலகலானது மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

இவ்வாறான பதவி விலகலுக்கு துணைபோனவர்கள் வேறு யாருமல்ல நாட்டு மக்களின் உரிமைகளை அடகு வைத்த நாட்டு வளங்களை விற்றுத் தீர்த்த ரணில் ராஜபக்சாக்கள் தான். 

சாள்ஸ் கடந்த காலத்தில் வட மாகாண ஆளுநர், மாவட்ட அரசாங்க அதிபர், கலால் திணைக்களம் போன்றவற்றில் பதவிகளை வகித்துள்ளார். ஆகவே அரசியல் செல்வாக்கின் நிமிர்த்தத்தாலா இவ்வாறான பதவிகளுக்கு வந்தார் என மக்கள் மத்தியில் கேள்வி எழுகிறது.

தேர்தலை பிற்போடுவதற்கு சூழ்ச்சி செய்யும் ரணில் ராஜபக்சாக்கள் உட்பட அனைவருக்கும் எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்” என தெரிவித்தார்.