ரன்பீர் கபூர் நடிக்கும் திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து-ஒருவர் உயிரிழப்பு!

நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் இந்தி திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு மும்பை நகரில் மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வருகிறது. பெயரிடப்படாத இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த நிலையில், நேற்று இரவு திடீரென இந்த தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால், அந்த பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது.

காற்றில் பரவிய புகையால் அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. பின்னர் தகவலறிந்து வந்த தீயிணைப்புத்துறை அதிகாரிகள் தண்ணீரை பீச்சி அடித்து நீண்ட நேரத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இதுபற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தன. மேலும், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்து உள்ளதாக முதற் கட்ட தகவல் கிடைத்துள்ளது. தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.