ராஜீவ் கொலை வழக்கு - விடுதலையான ஈழத் தமிழர்கள் இலங்கை திரும்ப முடியுமா - தாயாரின் நெகிழ்ச்சி பதிவு


 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் 30 வருடங்களுக்கு மேல் தண்டனையை அனுபவித்து வந்த 6 பேரையும் விடுதலை செய்யுமாறு இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் அந்த ஆறு பேரில், இலங்கை குடிமக்களாக உள்ள நால்வர் மீண்டும் இலங்கை திரும்பமுடியுமா, என்ற வினா எழும்பியுள்ளது.

தற்போது விடுதலை உத்தரவு வழங்கப்பட்டவர்களில் நளினியின் கணவரான முருகன் என்றழைக்கப்படும் சிறிகரன், சாந்தன், றொபேட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இவர்களில் சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர் இலங்கை கடவுச்சீட்டை கொண்டவர்களாகவும் ஏனைய இருவரும் தமிழகத்திற்கு அகதி தகுதிநிலை கொண்டவர்களாகவும் உள்ளனர்.

இவர்கள் மீண்டும் இலங்கை திரும்பமுடியுமா என்ற வினாக்களும் அவர்களை இலங்கை அரசாங்கம் அனுமதிக்குமாக என்ற வினாக்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனின் அன்னை தில்லையம்பலம் மகேஸ்வரி தனது மகனுக்கு கிட்டிய விடுதலை குறித்து தாயார் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், வடமராட்சி – உடுப்பிட்டியில் வசித்து வரும் சாந்தனின் தாயார் தெரிவிக்கையில்,

“30 வருடங்களாகக் கோயில்களகத் திரிந்து முன்வைத்த வேண்டுதல்களுக்கு இன்று பலன் கிடைத்துள்ளது. எனது மகன் விடுதலையாவதற்குக் காரணமான அனைவருக்கும் நன்றி.

பேரறிவாளனை விடுதலை செய்ததில் இருந்து எனக்குப் பெரும் மன வருத்தமாக இருந்தது. எனது பிள்ளையை எப்போது விடுதலை செய்வார்கள் என்று ஏக்கமாக இருந்தது. அது இப்போதுதான் நிறைவேறியது.

எனது பிள்ளைக்கு இப்போது 53 வயது. 30 வருடங்களைச் சிறையிலேயே தொலைத்துவிட்டார்.

எனது உடல்நிலை சரியில்லை. இல்லையென்றால் நான் சென்று எனது பிள்ளையை அழைத்து வருவேன்.

எனது ஆசை எல்லாம் எனது பிள்ளை நல்லபடியாக என்னிடம் வந்து சேரவேண்டும் என்பதுதான். அவருடன் நான் சிறிது காலம் வாழவேண்டும். அதற்காகத்தான் நான் உயிருடன் இருக்கின்றேன்” – என்றார்.

இதேவேளை, விடுதலையான ஆறு பேரில் 4 ஈழத் தமிழர்கள் என்பதால் அவர்களை இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பக் கூடாது என்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆறு பேரையும் விடுதலை செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி இதை வரவேற்கிறது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.