சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழ் திரையுலகில் புகழ்பெற தொடங்கியபோது மதுரையைச் சேர்ந்த ஏ.பி. முத்துமணி , முதன் முதலாக ரசிகர் மன்றத்தை ஆரம்பித்தார். நுரையீரல் தொற்றுக் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முத்துமணி சிகிச்சை பெற்றபோது அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு,மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துமணி, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து முத்துமணியின் மனைவியிடம் தொலைபேசியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை காரணமாகவே நேரில் வர இயலவில்லை என்று கூறியுள்ளார். மேலும் முத்துமணியின் மகளின் திருமணத்தை தாமே நடத்திவைப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            