மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி?

அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என முதலில் கூறப்பட்டது. அவர் உள்பட பல்வேறு இளம் இயக்குநர்கள் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இறுதியில் நெல்சன் இயக்கத்தில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு செய்தார். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தை அடுத்து ரஜினியின் 170 படத்தின் இயக்குநர் யார் என்கிற எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேட்டபோது அடுத்த படத்தின் கதையை தான் எழுதி கொண்டு உள்ளதாகவும் ரஜினியை வைத்து அடுத்த படத்தை இயக்க முடிந்தால் நிச்சயமாக இயக்குவேன் என்றும் கூறினார்.

ஜிகர்தண்டா திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டிய ரஜினிக்கு ஜிகர்தண்டா 2வில்  நடிக்க ஆர்வம் உள்ளதா ? என்று கேட்கப்பட்டபோது ஜிகர்தண்டா 2- வில்  ரஜினி நடிக்கவில்லை என்று தெரிவித்தார். ரஜினிகாந்துடன் பேசிக்கொண்டிருந்தால் மனதில் தன்னம்பிக்கை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  உரிய கதைகள் அமைந்தால் தானும் கிராமத்து கதைகளை இயக்குவேன் என கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்தார்.