ரஜினிக்கு முதன் முதலில் ரசிகர் மன்றம் தொடங்கியவர் மரணம்!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இன்று ‘சூப்பர் ஸ்டார்’ ஆக திகழ்ந்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர் மன்றங்கள் உள்ளன.ரஜினியின் தீவிர ரசிகர், அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ரஜினியின் கையால் தாலி எடுத்துக் கொடுத்து திருமணம் செய்தவர் என்ற பெயருக்கு சொந்தக்காரர் மதுரை முத்துமணி. இதற்கு காரணம் ரஜினிக்கு முதன் முதலில் ரசிகர் மன்றம் தொடங்கியவர் இவர் தான். 1975-ம் ஆண்டு ரஜினி காந்த் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் அறிமுகமானார்.20 நிமிடங்கள் மட்டுமே படத்தில் தோன்றிய அவருக்கு அன்றே ரசிகர் மன்றம் தொடங்கியவர் தான் முத்துமணி. மன்றத்தின் பெயரில் தனது சொந்த செலவில் பல்வேறு நற்பணிகளை செய்த இவர், ரஜினியின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.1993-ம் அண்டு மார்ச் 26-ந் தேதி சென்னையில் ரஜினியின் வீட்டு பூஜையறையில் முத்துமணிக்கு திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி கையால் தாலியை எடுத்துக் கொடுக்க வேண்டும் என முத்துமணி விரும்பியதால் அவரை சென்னைக்கு வரவழைத்து தனது வீட்டு பூஜையறையில் தனது கையால் தாலியை எடுத்துக் கொடுத்து ரஜினி அழகுபார்த்தார்.அந்த அளவிற்கு ரஜினியிடம், முத்துமணிக்கு செல்வாக்கு இருந்தது. 45 வருடங்களுக்கும் மேலாக ரஜினியின் தீவிர ரசிகராக இருந்த முத்து மணிக்கு கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டது. இது பற்றி தெரியவந்ததும் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் முத்துமணியிடம் பேசி உடல்நலம் விசாரித்தார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துமணி உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுக்கு பணமின்றி தவித்தார். இது குறித்து தெரியவந்ததும் அவரை சென்னைக்கு வரவழைத்து தனியார் மருத்துவமனையில் சேர்த்து தேவையான சிகிச்சைகளை அளிக்க ரஜினிகாந்த் உதவி செய்தார்.அதன்பிறகு மதுரை வந்த முத்துமணிக்கு கடந்த சில நாட்களாக மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது பற்றி ரஜினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முத்துமணியின் மறைவுக்கு அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தலைவர் சுதாகர் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.இறந்த முத்துமணிக்கு லட்சுமி என்ற மனைவியும், சாய் ஹரிணி என்ற மகளும் உள்ளனர்.