கனவுகளோடு காற்றில் கலந்த இளம் ஊடகப்போராளி ரஜீவர்மன் - இன்றோடு 16 ஆண்டுகள் கடந்துபோகிறது


ஈழத்து தமிழ் ஊடகப்பரப்பு என்பது உண்மையை எடுத்துச்சொல்லும் பணியில் இழந்துபோனது தான் ஏராளம் என்றே சொல்லிவிடலாம்.

அதிலும் தமது நேயர்களாகவும், வாசகர்களாகவும் இருக்ககூடியவர்களுக்கு நடுவுநிலைமை தவறா உண்மைகளை எடுத்துரைத்ததற்கு ஈழத்து தமிழ் ஊடகப்பரப்பு கொடுத்த விலை சுமார் “நாற்பதிற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள்” என்பதே கசப்பான ஒரு துன்பியலாகும்.

இந்தப் பட்டியிலில் சிறிலங்காவைப்பொறுத்தவரை ஏராளமான சிங்கள - தமிழ் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும், துப்பாக்கிகளால் சுடப்பட்டும் படுகொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களுள் தனது வாழ்தலின் மீதான ஏராளமான கனவுகளோடு ஊடகத்துறையினுள் நுழைந்து, தனது கடின உழைப்பால் ஊடகப்பரப்பில் கண்காணிக்கப்படக்கூடிய ஒருவராக வளர்ந்துகொண்டிருந்த 25 வயதுகளே நிரம்பிய செல்வராஜா ரஜீவர்மனும் ஒருவர்

அந்த இளம்பராய ஊரகப்போராளியை மௌனிக்கச்செய்து இன்றோடு 16 ஆண்டுகள் கடந்துபோகிறது.   

கொண்ட கொள்கைக்காக தனது பயணத்தை மிகுந்த நெஞ்சுரத்தோடு அமைத்துக்கொண்டதனால் பேனாமுனைகளின் நேரிய எழுத்துக்களை ஏற்றுக்கொள்ளாதவர்களால் படுகொலைசெய்யப்பட்ட இளம் ஊடகப்போராளி செல்வராஜா ரஜீவர்மன் அவர்களை கனதியான வலிகளோடு நினைவேந்துகிறது.