நேட்டோ எல்லையில் பதற்றம் - செயற்கைகோளில் சிக்கிய ரஷ்ய அணுகுண்டு விமானங்கள்!


ரஷ்யா உக்ரைன் போர் கடந்த 7 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், உலக நாடுகள் பலவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அணு ஆயுத தாக்குதல் அச்சுறுத்தல் உண்மையாகி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பின்லாந்து-நோர்வே எல்லையில் அணுகுண்டு வீசுவதற்கான 11 தாக்குதல் விமானங்களை நிலைநிறுத்தியுள்ளார். பிரித்தானிய பத்திரிகையான ‘தி மிரர்’ செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

புடினின் இராணுவ ஜெனரல் மேற்கத்திய நாடுகள் மீது குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டுகின்றன.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளின் கூற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. ஏனெனில் புடினும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரும் ரஷ்யா தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல முடியும் என்று மறைமுகமாக கூறியுள்ளனர்.

புடினின் உத்தரவின் பேரில், 11 Tu-160 அணு குண்டுவீச்சு விமானங்கள் ரஷ்யாவின் ஒலென்யா விமான தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், கோலா விமான தளத்தில் நான்குTu-95 விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை நோர்வேயின் உண்மைச் சரிபார்ப்பு இணையதளமான Faktisk.noவும் இதை உறுதிப்படுத்தியுள்ளது. "செயற்கைக்கோள் படங்கள் நோர்வேயில் இருந்து 20 மைல் தொலைவில் 11 அணு குண்டுவீச்சு விமானங்கள் இருப்பதைக் காட்டுகின்றன" என்று நோர்வேயின் இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேலிய செய்தித்தாள் ‘ஜெருசலேம் போஸ்ட்’ கூட ஒலென்யா விமான தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக கூறியது. பின்னர் இஸ்ரேலின் உளவு நிறுவனமான ‘இமேஜ் செட்’ இதை உறுதி செய்தது.

அணு ஆயுத தாக்குதல் விமானங்கள் பொதுவாக மாஸ்கோவில் இருந்து 450 கிமீ தொலைவில் உள்ள ஏங்கலின் விமான தளத்தில் நிறுத்தப்படும் நிலையில், தற்போது அங்கிருந்து அகற்றப்பட்டு பின்லாந்து மற்றும் நோர்வே எல்லைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் ஐரோப்பா மீது அணுவாயுத தாக்குதலுக்கான சாத்தியமும் அதிகரித்து வருகிறது.

இந்த அணு குண்டுவீச்சுகளில் அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்டதா அல்லது வழக்கமான ஆயுதங்களா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை.

ஏனெனில் அவை இரண்டு வகையான ஆயுதங்களுக்கும் பயன்படுத்தப்படலாம். ஓகஸ்ட் 12 ஆம் திகதி வரை, ஒலென்யா விமான தளத்தில் அணு குண்டுவீச்சு விமானங்கள் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.