கிழக்கு மாகாண ஆளுநருக்கு பகிரங்க சவால்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானை ''முடிந்தால் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து கடற்தொழிலாளர்களை அழைத்து அவர்களின் பிரச்சினையை கேட்டுத் தீர்த்து வைக்க முயற்சி செய்யுமாறு'' யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

நீங்கள் இந்தியாவை சேர்ந்தவர் 

''இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரவில்லை எனவும் மீன்களை பிடிக்கும் போது தற்செயலாக இலங்கை கடற்பரப்புக்குள் சென்று விடுகிறார்கள் என கிழக்கு ஆளுநர் கூறியிருக்கிறார்.

அவரின் கருத்தை கண்டிப்பதோடு கிழக்கு ஆளுநருக்கு ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறோம். நீங்கள் இந்தியாவை சேர்ந்தவர் என்பதை சொல்லாமல் சொல்லுகிறீர்கள்.

இந்தியாவில் உங்களுக்கு பல வியாபாரங்கள் உள்ள நிலையில் ஊடக நிறுவனங்களுக்கும் முதலீடு செய்து உள்ளீர்கள் என அறியக் கிடைத்துள்ளது. எனவே உங்கள் வியாபாரத்தை பாதுகாப்பதற்காக எமது கடற்தொழிலாளர்களை அடகு வைக்க வேண்டாம்.

இந்தியா எல்லை தாண்டிய கடற்தொழிலாளர் பிரச்சினை சுமார் 12 வருடங்களாக நீடித்து வரும் நிலையில் கிழக்கு ஆளுநர் செந்தில் ஒரு நாளிலேனும் எமது கடற்தொழிலாளர்களின் பிரச்சினை என்ன என கேட்டிருக்க மாட்டார்.

முடிந்தால் அவருக்கு நாங்கள் ஒன்றை கூறுகிறோம். முதலில் யாழ்ப்பாணம் வாருங்கள் எமது கடற்தொழிலாளர்களை அழைத்து உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என கேளுங்கள் முடிந்தால் அதனை தீர்த்து வைக்க முயற்சி செய்யுங்கள்.

அதை விடுத்து உங்கள் வியாபாரங்களை தொடர்ந்து இந்தியாவில் மேற்கொள்வதற்கு எமது கடற்தொழிலாளர்களை பலிக்கடா ஆக்க வேண்டாம் என்ற செய்தியை அவருக்கு கூற விரும்புகிறோம்'' என தெரிவித்தார்.