ஈராக்கின் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்!

நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை உடைத்து ஈராக்கின் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்துள்ளனர்.சக்திவாய்ந்த ஈராக்கிய மதகுரு மொக்தாதா அல்-சதரின் ஆதரவாளர்கள் பிரதமர் பதவிக்கு போட்டி வேட்பாளரை நியமிப்பதை எதிர்த்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்த குழு பாக்தாத்தின் நெருக்கமாக பாதுகாக்கப்பட்ட உயர் பாதுகாப்பு பசுமை மண்டலத்திற்குள் ஊடுருவியது. இது தூதரகங்கள் உட்பட தலைநகரின் மிக முக்கியமான கட்டடங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது.

சதரின் அரசியல் கூட்டணி கடந்த ஒக்டோபரில் நடந்த பொதுத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்றது, ஆனால் வாக்களிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் முட்டுக்கட்டை காரணமாக அந்தக் கூட்டணி ஆட்சியில் இல்லை.போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகித்ததாக கூறப்படுகிறது. ஆனால் மக்கள் கூட்டம் முன்னோக்கிச் சென்று நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தது.

நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், தேசியக் கொடிகளை அசைத்தும், புகைப்படம் எடுத்தும், கோஷமிட்டு ஆரவாரம் செய்தவாறும் நாடாளுமன்ற கட்டடத்தை சுற்றி அலைமோதினர்.போராட்டர்கள் கூட்டம், பாடி, நடனமாடி, மேசைகளில் படுத்திருக்கும் போது போராட்டக்காரர்களை கட்டடத்தை விட்டு வெளியேறுமாறு ஈராக் நாட்டின் தற்போதைய பிரதமர் முஸ்தபா அல்-காதிமி, அழைப்பு விடுத்தார்.எண்ணெய் வளம் மிக்க ஈராக்கிற்கு இந்த எதிர்ப்புக்கள் சமீபத்திய சவாலாகும், இது உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்து வரும் போதிலும் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

ஒக்டோபரில் நடந்த தேர்தலில் சதரின் குழு, மிகப் பெரிய நாடாளுமன்றப் பிரிவாக உருவெடுத்தது, ஆனால் இன்னும் பெரும்பான்மைக்கு மிகக் குறைவாகவே உள்ளது.ஆகையால், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, ஒரு புதிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.