முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா மீது விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் திங்கட்கிழமையன்று (02) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டின் கீழ் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
திங்களன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாக நடைபெறவுள்ள இந்த கண்டன எதிர்ப்பு போராட்டத்தில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கபட்டுள்ளது.
ஈழத்தமிழர்களின் மரபுவழித் தாயகப் பகுதியான குருந்தூர் மலையின் இருப்பையும், அங்கு தமிழர்கள் வழிபாடியற்றுவதற்கான உரிமையையும் பெற்றுக்கொடுத்ததில் ஆரம்பித்து.
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை நடாத்துவதற்கு அனுமதித்ததற்காகவும் சிங்கள பேரினவாதத்தால் பழிவாங்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அவர்களுக்கு ஏற்பட்ட இந்நிலை, தமிழினம் சார்ந்து சிந்திக்கின்ற, நியாயத்திற்காக கடமையாற்றுகின்ற இன்னுமோர் தமிழ் நீதிபதிக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
நீதியின் செங்கோலை, அதிகாரத் தரப்புகளுக்கும், சிங்கள பேரினவாதத்திற்கும் சாதகமாக வளைக்க மறுத்ததற்காக ஒரு தமிழ் நீதிபதிக்கு இந்த நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது,
இதன் விளைவால் நாட்டின் சிறுபான்மை இனமாக அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஈழத்தமிழினத்தின் இருப்பும் சவாலுக்கு உள்ளாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனைகளை சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு கொண்டுசேர்க்கும் வகையில் இந்த கண்டனப் போராட்டம் இடம்பெறவுள்ளதால் அனைத்துத் தரப்பினரையும் இணைந்துகொள்ள கோரப்பட்டுள்ளது.
இனத்தின் இருப்புக்காகப் பதவி துறந்திருக்கும் நீதிபதிக்காக சர்வதேசத்தின் நீதியைக் கோரத் தவறுவது, எங்கள் இனத்தின் இருப்பை இன்னும் வலுவிழக்கச் செய்யும் என்பதையும் வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.