தமிழர் பகுதிக்கு நகரும் ரணில்! மக்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகள்



எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று(22) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்ற வட மாகாணத்துக்கான விசேட தேவை உடையவர்களுக்கான வைத்தியசாலையை திறந்துவைக்கவுள்ளதோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் விசேட நடமாடும் சேவை ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலமாக முல்லைத்தீவு மக்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலேயே நடைபெற இருக்கின்ற நடமாடும் சேவை மூலம், தற்பொழுது முல்லைத்தீவு மாவட்ட மக்கள் எதிர் நோக்குகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக் கூடியதாக இருக்கும்.

யுத்தத்தின் போது மரணமடைந்த மற்றும் யுத்தத்தினால் சொத்துக்களை இழந்தவர்களுக்கான நட்ட ஈட்டுக் கொடுப்பனர்களும் அன்றைய தினம் வழங்கப்பட இருக்கிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பிறப்புச் சான்றிதழ் மற்றும் திருமண பதிவு சான்றிதழ் அற்று இருக்கின்றவர்கள் அன்றைய தினமே அவற்றை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

அதேபோன்று, தேசிய அடையாள அட்டை இதுவரை பெற்று கொள்ளாதவர்கள் தங்களுக்குரிய தேசிய அடையாள அட்டையை அன்றைய தினமே பெறுவதற்குரிய சந்தர்ப்பங்களும் இருக்கிறது” - என்றார்.