விடுதலைப் புலிகளின் தலைவரின் இறுதி நிமிடம் - முன்னாள் போராளி வெளியிட்ட பகீர் தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் உயிரிழந்தது 2009 மே 17 ஆம் திகதி என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அரசியல் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் தயாமோகன் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “தமிழீழ போர் நடந்து கொண்டிருந்த போது தலைவரின் மூத்த மகன் சாள்ஸ் 2009ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி அதிகாலை வீரச்சாவு அடைந்தார். 

அதற்கு முன்னர் துவாரகா படுகொலை செய்யப்பட்டதாக எமக்கு தகவல் கிடைத்தது. மேலும் அவர் மே 13 ஆம் திகதி உயிரிழந்ததாகவும், அங்கு இருந்த போராளிகளின் மூலம் இந்த தகவலை உறுதி செய்தோம். 

மேலும் எமது இயக்கத்திற்கு அறிவிக்கப்பட்ட செய்தி எப்போதும், அறிவிக்கப்பட்ட செய்தியாகவே இருக்கும், அதை மாற்றி அமைக்கின்ற, ஆய்வு செய்கின்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 

அதேநேரம் துவாரகாவின் மரணம் என்பது சாள்ஸ் அவர்களுக்கு முன்பு நடத்ததால் அவரின் வித்துடல் எடுத்து விதைத்ததாக நாங்கள் அறிகிறோம். 

உதாரணமாக பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் மூத்த மகள் வீரச்சாவு அடைந்த சண்டையில், துவாரகாவும் காயமடைந்து 2009 மே 13 ஆம் திகதி உயிரிழந்ததாகவே எமக்கு செய்தி கிடைத்தது.

அதேநேரம் தலைவரின் மனைவி மதிவதனி கொத்துக் குண்டு வீச்சில் படுகாயமடைந்து பின்னர் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். 

பின்னர் போர் தீவிரம் அடைந்த போது, சிறிலங்கா இராணுவப் படை சுற்றிவளைத்த போது, எமது தலைவர் தனது கை்துப்பாக்கியால் சுட்டு உயிர் மாய்த்துக் கொண்டதாக எமக்கு செய்திகள் கிடைக்கப்பெற்றது.” என தெரிவித்துள்ளார்.