சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

புதிய இணைப்பு

சீனாவின் (China) கிங்காய் மாகாணத்தில் இன்று (08) 5.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கு சீனாவின் முக்கிய இயற்கை நீர்வழியான மஞ்சள் நதிக்கருகில் 156 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று (08) கிங்காய் நிலநடுக்கத்தின் மையம் திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு வடகிழக்கே 1,000 கி.மீ. தொலைவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


முதலாம் இணைப்பு

சீன (China) எல்லைப் பகுதியில் அமைந்துள்ள திபெத்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் நிலநடுக்கதத்தால் 130 பேர் காயமடைந்ததாக சீனா (China) அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கமானது திபெத்தில் உள்ள நகரமான ஷிகாட்சேயில் இன்று (7.1.2024) காலை உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் ஏற்பட்டுள்ளது.  

உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணி

7.1 ரிக்டர் அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகளின்படி, நிலநடுக்கத்திற்கு பிறகு சிறிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளதோடு, அண்டை நாடான நேபாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.   

அத்துடன் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.  

இடிபாடுகளுக்கு மத்தியில் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் சுமார் 1500 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவசரகால மேலாண்மை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.