பல கோடி மக்களின் பிரார்த்தனையுடன் விடைபெற்றார் போப் பிரான்சிஸ்


நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின்  இறுதி ஆராதனைகள் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணியளவில் வத்திக்கான் நகரில் உள்ள புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெற்றது


இறுதித் திருப்பலியை கர்தினால் குழுமத்தின் தலைவர் கர்தினால் ஜியோவானி பெட்டிஸ்டா ரே ஒப்புக்கொடுத்தார்.


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ், உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உட்பட 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆராதனையில் பங்கேற்றனர்.

நித்திய இளைப்பாறிய பாப்பரசர் பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனையில் பங்கேற்பதற்காக இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்று இருந்தார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹெக்டர் அப்புஹாமி மற்றும் வைத்தியர் காவிந்த ஜயவர்தன ஆகியோரும் பாப்பரசர் பிரான்சிஸின் புகழுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

 2013-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் திகதி 266-ஆவது பாப்பரசராக பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டார்.
 1300 ஆண்டுகளில் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்ட ஐரோப்பியர் அல்லாத பாப்பரசர் இவர் ஆவார்.

கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக நிமோனியா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் நீண்ட சிகிச்சைக்குப் பிறகு அண்மையில் வீடு திரும்பிய நிலையில் அவர் கடந்த திங்கட்கிழமை நித்திய இளைப்பாறுதல் அடைந்தார்.

போப் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் லத்தீன் அமெரிக்கர் என்ற பெருமையும், இனம், மதம், பாலினம் கடந்து அனைத்து மனிதர்களையும் நேசித்தவர் என்ற புகழுக்கும் சொந்தக்காரராக வாழ்ந்து மறைந்திருக்கிறார் பாப்பரசர் பிரான்சிஸ்.